Wednesday, September 28, 2016

இடம் பெயர்ந்த இருமேனி


இடம் பெயர்தல் பல வளங்களை தருகிறது. இடம் பெயர்தல் உயிர் பாதுகாக்கவும், கொள்கை பாதுகாக்கவும், வளர்ச்சிக்காகவும் என பல்வேறு நோக்கங்களுக்காக சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் நவீன காலத்தில் பொருளுக்காக இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்த நாட்டின் தங்களின் பண்பாட்டுக்கூறுகளையும் விதைத்து நிமிர்ந்து பார்க்க வைத்தவர்கள் தமிழ் முஸ்லிம்கள். அதிலும் குறிப்பாக இருமேனி தமிழ் முஸ்லிம்களின் சரித்திரப் பக்கங்களையும், சமீப கால செயல்களையும் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் கிழக்குக் கோடியில் ராமேஸ்வரத்தை சமீபமாகக் கொண்ட இருமேனி இயற்கை வளம் பெற்ற ஊர்களில் ஒன்று. இங்கு நிலத்தடி நீர் பத்து அடியில் பீறிட்டு வந்த காலம் உண்டு. இப்போதும் இருபது இருபத்தைந்து அடியில் நீர் வரும் வளம் கொண்ட ஊர். எனக்குத்தெரிந்து நான் இருமேனி இறைப்பணிக்கு வந்து ஒரு வருடத்தில் 1994 ல் ஒரு பெருமழையில் கிணற்றில் வெறும் வாளியை விட்டு நீர் எடுத்ததை என் கண்ணாலேயே கண்டுள்ளேன்.
இன்று மக்களின் அடிப்படை வசதிகள், தேவைகள் அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும்போது அது கூட இல்லாத ஒரு நேரத்தில் பொருளாதாரம் வேண்டி கடல் கடந்து சென்ற இருமேனிவாசிகள் உழைப்பை மூலதனமாகக் கொண்டு தங்களையும் தாங்கள் சார்ந்த நாட்டையும் வளப்படுத்தியதோடு, தங்கள் கையில் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும், மார்க்க அறிவையும் எடுத்துச் சென்றனர்.
ஹிஜ்ரத் என்னும் இடம் பெயர்தல் நடக்காத மனிதரில்லை. அதனால் தானும் மற்றவர்களும் பலனடைந்த ஹிஜ்ரத்தாக அந்த இடம் பெயர்தல் அமைவதையே நன்மை என இஸ்லாம் அடையாளம் காட்டுகிறது. அந்த வகையில் இருமேனிவாசிகளின் இடம்பெயர்வு தந்த மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுவதே இந்த கட்டுரை.
பிழைப்புக்காக சென்ற மக்கள் தங்களின் மார்க்க, இலக்கிய, சமூக நலப்பணிகளை எவ்விதம் மேற்கொண்டார் கள் என்பதை  சரம் சரமாகப் பார்ப்போம். இலங்கைக்கு இடம் பெயர்ந்து ஊர்த்தொடர்புடன் இருந்த மரியாதைக்குரிய அப்துல் அஸீஸ் அவர்களிடமிருந்து என் பார்வை ஆரம்பமாகிறது. மார்க்கப்பற்றும், வாழ்க்கைப்பேணுதலும் கொண்ட அம்மனிதர் மக்களால் இன்ஷாஅல்லாஹ் என்றே அழைக்கப்பட்டார்.
 காரணம், “நான், எனது, என்னால்தான்” என்ற அகம்பாவ வார்த்தைகளை உடைத்து அல்லாஹ்வால் மனிதனுக்கு  அறிமுகம் செய்யப்பட்ட வார்த்தை இன்ஷாஅல்லாஹ். அல்லாஹ் நாடினால் நடக்கும், செய்வேன், என்னால் எதுவுமில்லை என்ற பணிவை உள்ளடக்கிய அந்த வார்த்தைகளின் உயிராக அவரின் செயல்கள் இருந்தது. வைரக்கல் வணிகராக இருந்த போதும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத பண்பை அவர் பள்ளிவாசல் சென்று வீடு திரும்பும்போது கால்களின் மண்ணை துடைத்து விட்டு வீட்டுக்குள் வரும் செயல் உணர்த்தும். பள்ளிவாசல் மண் என் வீட்டுக்குள் வந்தாலும் அதற்கும் கேள்வி உண்டு என அதற்கு அவர் விளக்கம் சொல்வதுண்டு. அவர் எழுதிய மார்க்க நூற்கள் (பெயர் ஞாபகமில்லை) இரண்டு. தன் பணிகளூடே அவர் செய்த இறைத்திருப்பணி இது.
அதுபோன்றே பொருளாதாரம் தேடி சென்ற மலேஷிய இருமேனி வாசிகள் மரத்துக்கு வேர் போன்று கோலாலம்பூர் முதல் ஜொஹூர் வரை, சபா விலும் கூட ஆங்காங்கே நடக்கும் தமிழ் முஸ்லிம்களின் மார்க்க சேவைகளிலும், இந்திய முஸ்லிம் பள்ளிகளின் உருவாக்கத்திலும் துணை நின்றதை பார்க்க, கேட்க முடிகிறது. 
குறிப்பாக ஈப்போ பினாங்கு இரு மாநிலங்களிலும் தமிழ்முஸ்லிம் மார்க்கப்பணிகளில் இருமேனி வாசிகளின் பங்கு வெளிப்படையானது. சபா வில் தமிழ் முஸ்லிம் ஆலிம்கள் அறிந்த முகங்களில் இருமேனியின் ஹாஜி ஃபௌஸுத்தீன் அவர்களும், அன்னார் மருமகன் ஆஷிக்கும், ஈப்போவில் ஹாஜி பி எஸ் எ ஷாஹுல் ஹமீது அவர்களும், மௌலவீ முபாரக் அலீ அவர்களும், கோலாலம்பூரில் மர்ஹூம் டத்தோ ஹாஜி ஸலாஹுத்தீன் அவர்களின் தீன் ஜுவல்லர்ஸ்  (தற்போது அன்னாரின் பிள்ளைகள் நடத்தி வரும் நிறுவனம்) இவர்கள் அனைவரும் முகம் தெரிந்தவர்கள். தெரியாமலும் நிறையப்பேர் உள்ளனர்.
மலேஷியாவில் இருமேனி வாசிகளின் பணிகள் : மலேஷிய இருமேனி முஸ்லிம் ஜமாத் என்ற பெயரில் ஒன்றிணைந்து இருமேனி கூட்டமைப்பை உருவாக்கி ஒவ்வொரு இருமேனி வாசிக்கும் “நான் இருமேனியில் என் மக்களோடு இருக்கிறேன்” என்ற உணர்வை உண்டாக்குவது. (மொத்த நோக்கமும் இப்புத்தகத்தின் முதல் பக்கங்கள் சொல்லியிருக்கும்)
அதுபோக மலேஷியாவின் அனைத்து தமிழ்நாட்டின் ஊர்களும் ஒன்றுபட்ட அமைப்பிலும் இடம்பெறுவது. உதாரணமாக ஈப்போவின் PRIM  (persatuan India muslim perak) அமைப்பில் இருமேனி மலேஷிய வாசிகள் இடம் பெற்றுள்ளனர். கோலாலம்பூரில் PANGSAR PARK பகுதியில் உள்ள தமிழ் முஸ்லிம் மத்ரஸா, கோலாலம்பூரின் பெரும்பாலான மார்க்க உபன்னியாச நிகழ்வுகளின் ஏற்பாடு, சிறப்பு மார்க்க நிகழ்வுகளுக்கான பங்களிப்பு அனைத்திலும் இருமேனி தீன் ஜுவல்லர்ஸின் பங்களிப்பு மகத்தானது. பூச்சோங்க் பகுதியின் தமிழ் முஸ்லிம் மார்க்க நிகழ்வுகளின் மர்ஹூம் இருமேனி ஜைனுல் ஆபிதீன் அவர்களின் பங்களிப்பும், இப்போது அவர்களின் மகனாரின் பங்களிப்பும் மகத்தானது.
மலேஷியப் பத்திரிககைகளில் பிரதான எழுத்தாளர்களாக இருமேனி ஹாஜி பி எஸ் எம் ஷாஹுல் ஹமீது, இருமேனி செய்யது உஸ்மான் மற்றும் சிலரின் எழுத்தோவியங்கள் இடம்பெறாத புனித தினங்கள் இருக்க முடியாது. சில அமைப்புகளின் ஆலோசகர்களாகக் கூட நமது மக்கள் உள்ளதை மறுக்க முடியாது.
இப்படி எத்தனை எத்தனையோ…..!
இதே இருமேனியிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் இருமேனிக்கு செய்த வளர்ச்சிப் பணிகளும், செய்து கொண்டிருக்கிற பணிகளும் ஏட்டில் அடங்காதது. ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் சம்பாத்தியத்தில் தங்கள் குடும்பத்தை வளமாக வைத்திருந்தது எல்லாவற்றையும் விட மேலான பணி. காரணம் குடி உயரக் கோல் உயரும் என்பது தமிழ் அறநெறி. அடுத்து இருமேனி முஸ்லிம் சமுதாய அறப்பணிகள் பெரும்பாலும் கடல் கடந்த மக்களாலேயே அதிகம்.
அரபு இருமேனி முஸ்லிம் நலச்சங்கம் அரபு நாட்டின் இருமேனி மக்களை ஒன்றிணைத்ததுடன் முதன் முதலாக பள்ளிவாசலின் தலைவாயிலை ஒட்டி இரண்டு கட்டிடங்களை நிறுவி தங்கள் பெயரை இறையேட்டில் பதித்தது முதல் அடுத்தடுத்து இருமேனியின் பெரும்பாலான களப்பணிகள் கடல் கடந்த மக்களாலேயே நிறைவேறின. 1994 ல் புதிய பள்ளிவாசல் குடியேற்றத்திலும், அது முழுமை பெற்றதிலும் அரபு மற்றும் மலேஷிய இருமேனியின் பங்கை மறக்க முடியாது. பிறகு 2000 க்கு பிந்தைய பள்ளிவாசல் புணர் நிர்மாணத்தை கோலாலம்பூர் தீன் ஜுவல்லர்ஸ் அதிபர் டத்தோ ஹாஜி எஸ் எம் ஸலாஹுத்தீன் தனி மனிதராக ஏற்றுக் கொண்டதும், இருமேனி மய்யவாடி சுற்றுச்சுவர் மற்றும் ஜனாஸா தொழுகைக்கான பள்ளிவாசல் பணியை மலேஷிய இருமேனியும், ஊரணிக்கு பக்கத்திலுள்ள மய்யவாடியின் பராமரிப்பையும், மத்ரஸா கைராத்துல் அஸீஸிய்யாவை தன் குடும்ப முன்னோர் அலித்தம்பி லெப்பையின் பெயரால் சிறு திருமண மண்டபம் போல் கட்டிக்கொடுத்ததும் மலேஷியா வாழ் தல்ஹா டாக்டர் அவர்களும் குடும்பத்தவரும் ஏற்றுக்கொண்டதும் எனக்குத் தெரியாத பலபணிகளின் புரவலர்களாக கடல் கடந்த இருமேனிவாசிகள் இருப்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
அது மட்டுமல்ல, இருமேனி வாழும் இறைநேசர் செய்யது முஹம்மது வலியுல்லாஹ்வின் வாழ்வு “அறிவூற்று அல்லாமா” என்ற பெயரால் கம்பம் பீர்முஹம்மது பாகவீ அவர்களால் வெளியிடப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பின் அதன் பிரதிகள் கிடைக்காத வேளை, அப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை செய்யது உஸ்மான் தனது முஸ்தஃபா பப்ளிகேஷன் மூலம் வெளியிட முணைந்த போது, அதன் பொருளாதாரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் சிங்கப்பூர் வாழ் இருமேனிவாசி ஜனாப் வருசை அஹமது அவர்கள்தான். இருமேனி பற்றிய செய்திகள் உலகறிய வலம்வருவதை விரும்பும் ஒரு இருமேனியாரின் ஆர்வம் அது.
என்னுடைய நினைவில் நீங்காது நிற்கும் சில விஷயங்கள், 1994 ல் மலேஷிய இருமேனிவாசிகள் அவ்விழாவில் தங்கள் ஒவ்வொருவரின் பங்கையும் எவ்வளவு ஆர்வத்துடன் செய்தனர் என்பதற்கு திறப்புவிழா அன்று கொடுக்க வேண்டிய பிரியாணி பொட்டலங்களை மடிப்பதற்கான பாதுகாப்பான பேக்கேஜ் பேப்பர்களை பலபேர் பங்கு பிரித்துக் கொண்டு வந்து சேர்த்து, “நீங்கள் சாப்பிடும் பிரியாணியை எங்கள் மலேஷியப் பேப்பரிலாக்கும் கட்டிக் கொடுத்திருக்கிறோம்” என்று பெருமிதம் கொண்டதிலாகட்டும், பலர் தங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்தது போல் வந்து ஒரு மாத அளவில் அந்நிகழ்சியில் தங்கள் பங்களிப்பை செய்ததிலாகட்டும், அதில் ஒரு தலைநிமிர்வு, கௌரவம் இருந்தது. இருமேனி என்ற பெயர் அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியிருந்த பெருமிதம் அது.  
தனிப்பட்ட முறையில் நான் இமாமாக இருந்த காலத்தில் எட்டாண்டுக் காலம் நுக்தா என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தியபோது அது தமிழகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பிரபல ஆலிம்களின் பயான்களில் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்ட அதிசயமும் நிகழ்ந்தது. அது 1993 ல் இருமேனியின் சகோதரர்கள் முஹம்மது அர்ஷாத் (சம்மாட்டி அப்பா மகன்) செய்யது உஸ்மான் ஆகியோரை வலதுகரமாகக் கொண்டு அன்றைய முஅத்தின் ஸக்கரியா அப்பாவின் பரக்கத்தான நானூறு ரூபாய் முதலீட்டில் முதல் புத்தகத்துக்கான வெளியீடு இல்லாமலேயே முதல் புத்தகத்தை நூறு ரூபாய் கொடுத்து சீதக்காதி ராவுத்தர் வாங்கியதிலிருந்து அதை டாப் கியர் போட்டு தூக்கியதில் மலேஷியாவின் புரவலர்கள் நிறையப்பேருக்கும், நுக்தாவுக்காக தங்கள் சங்கத்தில் பேசி முதல் டொனேஷன் ஆயிரம் ரூபாய் அனுப்பிய AIMWAN சங்க அன்றைய செயலர் அப்துல் வஹ்ஹாப் அண்ணன் (துவக்க முதல் இறுதிவரையான நுக்தாவின் கதை ஒரு நாவல் நீளம் எனவே இவ்வளவு சுருக்கம்) ஆகியோரும் அதன் ஏழாவது வருட வளர்வில் அச்சுக்கூட கடன் பன்னிரெண்டாயிரத்தை வேண்டுகோள் வைத்தவுடன் கொடுத்த ஹாஜி டத்தோ ஸலாஹுத்தீன் அவர்களும் இன்னும் எழுத இடமில்லாதவர்களும் என் ஆயுள் வரை என் துஆக்களில் இடம் பெறுபவர்கள்.
இறுதியாக மக்காவிலிருந்து மதினா இடம் பெயர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச்சொல்வார்கள், “நான் மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதினாவுக்கு வந்தவன். ஆனால் மக்காவுக்காக நான் எதுவும் செய்யத் தேவையில்லாத அளவு என் தந்தை இப்ராஹீம் (அலை) தங்களின் துஆக்களால் மக்காவை வளப்படுத்தி விட்டார்கள். என்னை ஆதரித்த மதினாவை வளப்படுத்த என் துஆக்களை அர்ப்பணிக்கிறேன்” என்பார்கள். அப்படித்தான் நடந்தது.

கடல் கடந்த இருமேனி வாசிகள் தங்களின் உழைப்பால், வியாபாரத்தால் அரபுலகின், மலேஷியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு சிறு பங்கை ஆற்றுவதுடன், சொந்த தாய்மண்ணை வளப்படுத்தி அல்லாஹ்வின் அருளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கும் பாத்திரமாகி நிற்கிறார்கள். கியாம நாள்வரை நிற்பார்கள்.

0 comments:

Post a Comment