Wednesday, September 28, 2016

ஹஜ் வழியனுப்பு நிகழ்ச்சி

அன்பான சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும். ஹஜ் இஸ்லாத்தின் ஒரு கடமை. அதற்கு மட்டும் ஏன் இத்தனை ஏற்பாடுகள்? நாம் சிந்திக்க வேண்டும். கலிமா நம் ஈமான் பாதிக்கப்படும்போது புதுப்பிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். தொழுகை தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரையிலான கால அளவிலான கடமை. நோன்பு ரமளான் ஒன்றில் துவங்கி ரமளான் இறுதியில் முடியும் குறிப்பிட்ட காலக்கடமை. ஆனால் ஹஜ்ஜின் கடமைக்காலம் என்று பார்த்தால் ஹஜ் பிறை 8 ல் துவங்கி பிறை 12 வரையிலான 5 நாள் கடமைக்கு அல்லாஹ்வே “அல்ஹஜ்ஜு அஷ்ஹுரும் மஃலூமாத்” (ஹஜ் அறியப்பட்ட சில மாதங்கள்) என்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அந்த மாதங்கள் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் என்று மூன்று மாதங்களைச் சொன்னார்கள். இதிலேயே ஹஜ் மற்ற கடமைகளைப் போல் துவங்கி முடியும் சாதாரணக் கடமை அல்ல என்பதும் துவங்குவதற்கு முன்பே 65 நாள் ஏற்பாடுகளையும், முடிந்த பின் 18 நாள் உணர்வுப் பூர்வமான அனுபவிப்பும் கலந்தது என்பதை சாதாரண அறிவிலேயே நாம் புரிய முடியும்.
இந்தக் கடமைக்கு மட்டும் ஏன் பிரத்தியேகமாக வழியனுப்பும் வஸிய்யத்தும்?
அல்லாஹ் சொன்ன முன்னேற்பாடுகளில் உள்ளதுதான் இது. ஒரு 40 நாள் கடமைக்கான பயணமும், சங்கடங்களும், நீண்ட சிரமத்திற்குப்பின் நிறைவேற்றலும் உள்ள ஹஜ்ஜுக் கடமைக்கு செல்லும் முன் விடைபெறுவதும், மக்களுக் கிடையிலான கடன்களில் இருந்து விடுதல் அடைவதும், (அது கடனாக அல்லது தான் அவர்களுக்குச் செய்த நீதிக்குப் புறம்பான காரியங்களுக்கு நிவாரணம் தேடுவது……. இப்படி) அது மட்டுமல்ல. இப்பயணத்திலேயே தன் உயிர் போய்விடக்கூடாதா? என ஏங்கும் முஸ்லிம்கள்தான் அதிகம். எனவே விடைபெறுதல், தவறுகளுக்காக பரிகாரம் பெறுதல், மரண சாசனம் செய்தல் என அத்தனையும் நிகழ்கிறது. அவை அதீத விளம்பரத்துடன் செய்யப்படும்போது விமர்சனமாகிறது. தன் சம்பந்தப்பட்ட மனிதர்கள் அளவில் மட்டும் இந்த ஏற்பாடு அமையுமாயின் அது ஆரோக்கியமானதே!
ஹஜ் செய்த ஆணுக்கு ஹாஜி என்றும், பெண்ணுக்கு ஹாஜியா என்றும் பட்டம் ஏன்?
சிந்திக்க வேண்டிய கேள்வி. நிறையப்பேர் இதை அவர்களுக்கான மரியாதை என்று நினைத்துக் கொண்டிருப் பதால் இதெல்லாம் தேவையா? என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் ஹாஜி என்பதும், ஹாஜியா என்பதும் அவர்களின் கழுத்துக்கு வைக்கும் கத்தி. எந்த நேரத்திலும் அவர்களின் செயல்கள் கண்காணிக்கப்படுகிறது என்பதற்கான அடையாளம். காரணம். தொழுகை சாகும் வரை கடமை. அதற்கான பரிசு மறுமையில் மட்டுமே. நோன்பு ஒவ்வொரு வருடமும் கடமை. அதற்கான பரிசும் மறுமையில் மட்டுமே. ஸக்காத்தும் அது போலவே. ஆனால் ஹஜ்ஜுக்கான பலன் சொர்க்கம். அது நிறைவான ஹஜ் முடிந்தவுடன் நிச்சயமாகிறது. அதுவும் வாழ்வில் ஒருமுறையே கடமை என்பதால் அது கிடைத்து விட்ட ஆனந்தம் ஒவ்வொரு ஹாஜிக்கும் உண்டாகிறது. எனவே சமுதாயம் அவர்களை ஹாஜி, ஹாஜியா என்ற அடைமொழிகளால் அழைத்து “சொர்க்கத்தைப் பெற்ற நீ மறந்தும் கூட தவறி விடாதே!” என எச்சரித்துக்கொண்டே இருப்பதன் அடையாளம்தான் அப்பட்டம். இது டத்தோ மற்றும் டத்தின் பட்டம் பெற்றது போல. அப்பட்டம் கிடைக்கும் வரை ஒரு வி ஐ பி எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவர் அங்கீகரிக்கப் பட்டு டத்தோ மற்றும் டத்தின் ஆகி விட்டால், சட்டப்புறம்பான காரியங்களில் அவர் பெயர் வந்து விடக்கூடாது என்பதில் அவரும் மக்களும் மீடியாக்களும் கவனமாக இருப்பர். அதுதான் ஹாஜிக்கும், ஹாஜியாவிற்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் தன் தோழர் அபூபக்ரை ஹாஜி என்றழைத்தது வரலாற்றில் காணப்படுகிறது. இது ஒரு பெரிய விஷயமல்ல.
ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டு முழுமையான ஹாஜிகளாக திரும்பி வந்து சேவையாற்ற அல்லாஹ் அருள் புரிவானாக!

ஹஜ்ஜுப்பெருநாள்
ஹஜ் செய்தவர்களும், ஹஜ் செய்ய செல்கிறவர்களும் உளப்பூர்வமாக உணர்கிற, ஹஜ் செய்யாதவர்கள் பயான்களாலேயே ஒரு குடும்பத்தின் தியாகத்தை  எண்ணிப்பார்க்கிற அற்புதம்தான் ஹஜ்ஜுப்பெருநாள் தரும் பாடம். எல்லாக் கடமைகளுக்கும் இடம் குறிக்கப்படவில்லை. ஹஜ்ஜுக்கடமைக்கு மட்டும் இடம் குறிப்பாக்கப்பட்டுள்ளது. துல்ஹஜ் எட்டாம் நாள் ஹாஜிகள் தங்கும் இடம் மினா. இது வெட்டவெளியான ஒரு இடம். ஒன்பதாம் நாள் ஹாஜிகள் தங்குவது அரஃபா. இதுவும் பிரம்மாண்டமான மைதானம். அன்று இரவு ஹாஜிகள் தங்க வேண்டியது முஸ்தலிஃபா பெருவெளி. பிறகு மீண்டும் மினா. இவைகளில் ஹாஜிகள் தங்கும் ஐந்து நாள்களே ஹஜ்ஜின் கடமை நாட்கள்.
இதில் அதிசயம் என்னவெனில் மினாவிலும், அரஃபாவிலும் பெயருக்கு ஒரு பள்ளிவாசல் உண்டு. மற்றபடி அது மைதானம்தான். மூன்று மைதானங்களில் தங்கி இருப்பது ஒரு வணக்கமா? என சிந்தித்தால், இப்ராஹிம் நபி (அலை) தன் குடும்பத்துடன் அலையாய் அலைந்த இடங்கள் இவை என்பதும், அக்குடும்பத்தவர் எந்த சிந்தனையுமின்றி அல்லாஹ்வின் அடிமைகளாக இருந்த தியாகத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவே உலக முடிவு நாள் வரை உலக மூஸ்லிம்கள் அவர்கள் தங்கிய இடங்களில் தங்கவும், அதிலேயே வணக்கம் புரியவும் கடமையாக ஆக்கினான்.
இப்ராஹிம் நபி (அலை) அவர்கள் நின்று கஃபா கட்டிய இடத்தில் தொழுவதை சிறப்பாக ஆக்கினான் அல்லாஹ். தன் பிள்ளையின் தாகம் தீர வேண்டி தண்ணிர் தேடி ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே ஹாஜரா அம்மா ஓடியதை எல்லா ஹாஜிகளுக்கும் தொங்கோட்டக் கடமையாக்கினான் அல்லாஹ். அம்மா ஹாஜரா (அலைஹா) அவர்களுக்கும், மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் பிரத்தியேகமாக தந்த ஸம்ஸம் நீரை அருந்துவதை புனிதமாகவும், அப்படி அருந்தும்போது என்ன கேட்டாலும் தருவதாகவும் வாக்களித்தான்.
சுருக்கமாக ஹஜ்ஜுக்கடமையும் ஹஜ்ஜுப்பெருநாளும் ஒரு குடும்பத்தின் தியாக வெளிப்பாடாக அமைந்திருப்பது அல்லாஹ் சொன்னபடி நீங்கள் நடந்தால் உங்கள் எண்ணப்படியே அல்லாஹ் உங்கள் வாழ்வை ஆக்கிடுவான் என்ற செய்தி சொல்கிறது. .

உணர்வோம். உயர்வோம். ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment