Sunday, May 27, 2012

இது அறிவுடைமையா?-

அல்ஹிந்த் மார்ச் இதழில் ரஹ்மான் பிலாலியின் கட்டுரையில் வலிமார்களின் தர்ஹாக்களில் நடைபெறும் சந்தனக்கூட்டை அதன் ஆரம்ப வரலாற்றுடன் எழுதியிருந்தார்.ஆம். சரிதான். மக்கள் மாற்று மத அறிஞர்களின் கதா காலட்சேபத்துக்கும், தேர்த்திருவிழாக்களுக்கும் முஸ்லிம் ஏன்ற அடையாளத்துடன் சென்று வந்த அறியாமையை அகற்றி, மார்க்கத்தின் பக்கம் கவனம் திருப்ப செய்த முயற்சிகளில் ஏராளமான நல்ல முயற்சிகள் உண்டு. அதை நாமும் ஆதரிக்கிறோம். சீறாபுராணம், நூறு மஸலா போல. அவைகள் முழுக்க முழுக்க இஸ்லாமிய மணம் கமழ்பவை. ஹதீசிலும் கூட அந்த முயற்சிகள் ஆதரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் முழுக்க முழுக்க மாற்று மத ஜாடை கொண்ட சந்தனக்கூட்டையும் ஆதரித்து அதற்கும் தெய்வீக அடையாளம் கொடுப்பதும், அது இரவெல்லாம் ஊர் சுற்றுவதை ஒரு இபாதத்தைப் போல் விழித்திருந்து எதிர்பார்ப்பதும், அதன் மேல்பூக்களைத் தூவுவதை பாவ விமோச்சனமாகக் கருதுவதும், அதன் மேல் ஒருவர் இருந்து மக்களிடம் இருந்து ஒன்றைப் பெற்று அதற்குப் பதில் இன்னொன்றை புனிதப் பொருளாகத் தருவது  ....... என்ன இது? நியாயப்படுத்துவதற்க்கும் ஒரு அளவில்லையா?
எங்கள் இராமநாதபுரத்தில் ஒருகிராமத்தில் உள்ள கோவிலில் செவ்வய்க்கிழமையில் எது வேண்டினாலும் நடக்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமியப் பெண்கள் சிலர் கூட வந்து, வேண்டிய கொடுமையை அகற்ற, கீழக்கரைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தர்காவில் செவ்வாய்க்கிழமை மட்டும் விஷேசம் என்று கதை கட்டி, கூட்டம் கூட்டமாக மக்களைச் சேர்த்த கொடுமை நடந்தது. அதற்காக மஞ்சள் சோறும் அவிச்ச முட்டையும்தான் வைக்கும் நிபந்தனையுடன் (அது ஒரு ரிலே ரேஸ் வியாபாரமாக) நடந்தது அனைவருக்கும் தெரியும்.
வழி கெட்டவன் ஒன்றை மறுக்கிறான் என்பதற்காக அது கெட்டதாக இருந்தாலும் ஆதரிக்க வெண்டும் என்பது அறிவுடைமையா? இன்னொன்று அலி மியான் அவர்கள் மக்கள் கூடுவதை ஆதரித்திருக்கலாம். சந்தனக்கூட்டை ஆதரித்தார்கள் என்பதெல்லாம் ஓவர். ஆனால் மக்கள் கூடும் விஷயத்திலும் ஆரோக்கியமான ஏற்பாடுகள் தேவை.
 Reply Forward

அமைப்புகளின் கொசுக்கடி!

சென்ற 02 04 2012 முட்டாள்கள் தினத்துக்கு அடுத்த நாள், வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் அந்த அதிரடி அறிவிப்பு வந்தது. அதுவும் ஒரு முஸ்லிம் அமைச்சர் சிரித்துக்கொண்டே பக்கத்தில் நின்ற நிலையில் அந்த அறிவிப்பை கிருஷ்ணா வெளியிட்டார்.
“ஹஜ்ஜுப் பயணிகளுக்கான மானியம் இவ்வருடம் முதல் ரத்து செய்யப் படுகிறது” என்ற செய்திதான் அது. இதை இஸ்லாமிய அமைப்புகளே வலியுறுத்தியதாக, அதனால்தான் இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.
சில காலமாகவே, ஜெருஸலத்திற்கு பயணம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசு மானியம் வேண்டும். கைலாய யாத்திரைக்கு அரசு மானியம் வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்திருப்பதுதான் “சம்திங் ராங்” சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
இந்த மானியத்துக்கு எதிராக காவிகளாலும், கிறிஸ்தவர்களாலும் குரல் எழுந்த போதே, தெளிவான விளக்கம் தரப்பட்டது. அதாவது, ”ஹஜ் மானியம் என்பது, அரசு முஸ்லிம்களுக்குப் போடும் பிச்சை அல்ல, ஹஜ் பயணிகளால் பல வகையில் பயன்பெறும் சவுதி அரசு, அதன் விமான நிறுவனங்கள் அந்த பயன்களை இந்திய அரசுக்கே திரும்பத் தருவதால், அதன் ஒரு பகுதி (சுமார் தலைக்கு 18 ஆயிரம் மட்டும்) மானியமாக பயணிகளுக்கு அரசு திரும்பத் தருகிறது” என்பதுதான் அந்த விளக்கம்.
சரி, ஜெருஸலத்திற்கு மானியம் கேட்டதாலும், கைலாய யாத்திரைக்கு மானியம் கேட்டதாலும் முஸ்லிம் அமைப்புகள், “இப்படியெல்லாம் நீங்கள் கேட்பதால் எங்களுக்கும் வேணாம்பா!” என்று சொல்லியிருந்தால், அது தங்களுக்குத் தாங்களே வெட்டிக்கொள்ளும் குழி என்பதில் சந்தேகமில்லை.
ஜெருஸலம் யூதர்களுக்கு மட்டுமான புனித பூமியாகவே யூதன் நினைத்திருக்கிறான். வேறு எந்த மதத்தவனையும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை. யூதர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள கிறிஸ்து பிறந்த பெத்லஹெமிலேயே வருடா வருட போராட்டத்துக்குப் பின் கிறிஸ்துமஸ் கொண்டாட அனுமதிக்கப்படுகிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. பயணிகள் நாலாந்தர சுற்றுலா பயணிகளாக வரலாம். போகலாம் அவ்வளவுதான்.
கைலாய யாத்திரை. சொல்ல வேண்டியதே இல்லை. ராணுவ பாதுகாப்பு, தங்களின் நியாயமான உரிமைகளுக்காக போராடும் காஷ்மீர் போராளிகள் கூட கைலாய பயணிகளிடம் காட்டும் கரிசனம், வருடா வருடம் அவர்களுக்கான விஷேச ஏற்பாடுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வருடம் கூட ஹஜ் மானிய ரத்து அறிவிப்புக்குப் பின் அடுத்த அரசு அறிவிப்பு, கைலாய யாத்திரைக்கு ஹெலிகாப்டர் கட்டணம் குறைப்பு என்ற அறிவிப்பு.ஒரு மாதிரியா ஹஜ் மானியத்தை ஒழித்து நம் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டாயிற்று. அடுத்து என்ன?
“எல்லாரும் இட ஒதுக்கீடு கேட்பதால் எங்களுக்கு வேண்டாம். ஹிந்துக்கள் எல்லாரும் தங்கள் ராம ஜென்ம பூமிக்காக போராடுவதால் பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையை கை விட்டு விடுகிறோம்” என்றெல்லாம் சுத்தமாக மண்டையில் மசாலா இல்லாத இஸ்லாமிய அமைப்புகள் சொன்னாலும் சொல்லலாம்.
மொத்தத்தில் அமைப்புகளின் கொசுக்கடி தாங்க முடியலப்பா!