Sunday, November 6, 2011

ஆண் என்ற அகம்பாவத்தை குர்பானி கொடுங்கள்

மீண்டும் ஒரு ஹஜ்ஜுப் பெருநாள் மலர்ந்துள்ளது. அதே ஆடு மாடுகளின் குர்பானி. அதே இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாக வரலாறு, அதே தக்பீர் முழக்கங்கள்......... இத்யாதி, இத்யாதி.
இதைத்தாண்டி என்ன இருக்கிறது?
இருக்கிறது. அதுதான் நீங்கள் ஆண்மகனாக இருந்தால், உங்கள் ஆண்மைத் திமிரை அறுத்தெறியுங்கள்.... என்ற செய்தி.
வயதான காலத்தில் இப்ராஹீம் (அலை) ஹாஜரா ஜோடிக்கு இஸ்மாயீல் (அலை) என்ற மகவு பிறக்கிறது. குழந்தைப் பருவத்தையும் கடக்கிறது. அதன் பிறகே அதை அறுத்து பலியிடும் கனவு... அதைத் தொடர்ந்த காட்சிகள் நடக்கின்றன.
கொஞசம் சிந்தியுங்கள். இங்கே ஒரு தெளிவு. அல்லாஹ்வைப் பணிவதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. ஆண் பிள்ளையைப் பெற்றதால் யாரும் உயர்ந்து விடவோ, பெண் பிள்ளையைப் பெற்றதால் யாரும் தாழ்ந்து விடவோ போவதில்லை.
அல்லாஹ்வைப் பணிந்த இம்ரானின் மகள் மர்யமும், அதே அல்லாஹ்வைப் பணிந்த இஸ்மாயீலும் ஒரே தரத்தில் அல்லாஹ்வால் குர் ஆனில் சிலாகித்துச் சொல்லப் பட்டதன் மூலம், தன்னை அற்பமாக என்னும் மனிதனே சிறந்தவ னாகிறான்.
அதிலும் அல்லாஹ் தனக்காக பலியிடுமாறு அறிவுறுத்தியது ஆண் மகனை, அதுவும் தவமாய் தவமிருந்து பெற்றவனை என்பதில் இருந்து அறுத்து பலியிட ஏவப்பட்டது மகனை அல்ல. "ஆண் என்கிற அந்த ஆளுமைத்திமிரை" என்பதை மனித சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஹஜ்ஜுப் பெருநாள் திரும்பத் திரும்ப வந்து உணர்த்தும் செய்தி.
ஆண்மைத் திமிர் எவ்வளவு கொடியது?
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விவாகரத்துக்கு பல படிகள் உண்டு. முதலில் ஒரு தலாக். அதன் பின் இணைய வாய்ப்பிருந்தால் இணையலாம். பிறகும் முறுகல் நிலை வந்தால் மீண்டும் ஒரு தலாக். அதிலும் ஒரு மாதத்தில் நிலைமை சரியானால் இணையலாம்.
மீண்டும் அதே நிலை நீடித்தால் சொல்லப்படும் விவாகரத்து வார்த்தை இறுதியானது. இது குடும்பத்தில் அடிக்கடி புரியாத்தன்மையால் ஏற்படும் நிலைமைகளுக்கு இஸ்லாம் தரும் சுமூகத் தீர்வு.
ஆனால், பெண் கணவனுக்கு துரோகம் செய்து சோரம் போய் விட்டால், அல்லது கணவன் மனைவியை துன்புறுத்தி இன்பம் காணும் மன நோயாளியாக இருந்தால், கணவன் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் கொடுக்கலாம். அது போன்றே மனைவி குல்உ (குலா) முறையில் மூன்று தலாக் வாங்கிக் கொள்ளலாம்.
இன்று இதே சமுதாயத்தில் நடப்பது என்ன?
தமிழ் முஸ்லிம் பெண்களிடம் அவர்களாகக் கேட்கும் நியாயமான குலா முறை கூடத் தெரியாமல் அநியாயமான முறையில் ஆணுக்கு அடிமையாகவே சித்திரவதை படும் பெண்கள் அதிகம்.
அதை விட சோரம் போவது (விபச்சாரம்) போன்ற விஷயங்களல்ல, வரதட்சனை பாக்கி, கறப்பதற்கு பெண்ணிடமோ, பெண்ணின் தகப்பனி டமோ ஒன்றுமில்லை என்ற நிலை, கணவனின் உட்ன்பிறப்புகளுக்குப் பிடிக்கவில்லை, கணவனின் தப்புகளுக்குத் துணை போகவில்லை...... இது போன்ற சொத்தை காரணங்களுக்காக ஒரே நேரத்தில் மூன்று தலாக் கொடுக்கப்பட்டு அபலை ஆகும் பெண்களும், ஆணைப் பெற்றவள் என்ற மகாத் திமிரின் காரணமாக மாமியாரால் விரட்டப்படும் பெண்களும் நம் சமுதாயத்தில் எத்தனை? எத்தனை?
இன்னொன்று,
ஒரு ஆண் பொருளாதாரத்தில், நீதியில், அளவுக்கு மிஞ்சிய உடல் தேவைகளில் மிகைத்திருந்தால், ஒரு பெண்ணுக்கு மேல் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கூட மணமுடிக்க அனுமதி உண்டு. பலதார மணத்திற்கு ஆயிரத்தெட்டு கண்டிஷன் உண்டு.
நான் ஆண்பிள்ளை எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணுவேன் என்று திமிர் பேசி, முதல் மனைவியை பழி வாங்க இன்னும் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்தாலும், அல்லது ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணு என்ற கணக்கில், அமேரிக்க பிச்சைக்கார மாப்பிள்ளைகள் அங்கேயும் ஆசைக்கு எவளையாவது சேர்த்துக் கொண்டு, அத்தா அம்மா ஏமாந்துறக் கூடாதுண்ணு, வரதட்சணை பேசி, இன்னொரு கல்யாணம் செய்தாலும் இஸ்லாமிய ஷரீஅத்தில் அது தண்டணைக்குரிய குற்றம்.
இன்றைக்கு இதெல்லாம் பார்க்கப்படுகிறதா?
பஞ்சாயத்துப் பண்ண வேண்டியவனே இந்த வேலைகளை முன்னின்று செய்கிறான்.
அது மாதிரியே இன்னொரு கொடுமை. மஹர் மாப்பிள்ளை என்ற பெயரில் வருகிற தீவிரவாதி. சில ஆன்மிகக் கோமாளிகள் நடத்தி வைத்த இது மாதிரியான கல்யாணங்கள், பசையுள்ள இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய சைட் டிஷ் ஆக நடந்த திருமணங்களாகவே முடிந்துள்ளன.
ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய மக்களிடமும் புரையோடிப்போயிருக்கும் ஆண்மைத்திமிரை அழித்து ஒழியுங்கள் என்பதைச் சொல்லவே வருடா வருடம் ஹஜ்ஜுப் பெருநாளும் அதை ஒட்டிய சிந்தனைகளும் மாறி மாறி வந்து ஆண்மைத்திமிரை காவு கொடுக்க, அல்லாஹ்வுக்கு பயந்த ஆண்மகனாக வாழ வலியுறுத்துகின்றன.
செய்வோமா?
ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்....!