Thursday, March 24, 2011

மஸ் அலா கதைகள் -ஒரு மதிப்பீடு

என் நண்பன் ஹாபிழ் எம் ஏ சாகுல் ஹமீத் ஜலாலியின் மஸ் அலா கதைகள் சென்ற மாதம் வெளி வந்துள்ளது. சென்னை நிவேதிதா பதிப்பகத்தின் வெளியீடு இது என்பது ஆச்சரிய செய்தி. காரணம் முழுக்க முழுக்க இஸ்லாமிய ஆன்மிக வெளியீட்டை இஸ்லாமியர் அல்லாத சகோதரர் வெளியிட்டுள்ளது இந்த புத்தகத்தின் இன்னொரு கோணத்தை தெளிவு படுத்துகிறது. ஆம்.
இது முதலில் குறளோவியம் போல் ஹதீசோவியம். ஒவ்வொரு ஹதீசையும் ஒவ்வொரு வாழ்க்கை நடைமுறை பின்னணியில் எடுத்துச் சொல்லும் புதிய பார்வை. இதில் குட்டிக் கதை உண்டு. அக்கதையில் ஒரு நபிமொழி உண்டு. அக்கதையில் கண்ணுக்குத் தெரியாத எதார்த்தம் உண்டு. நவீனத்துவ கதைகளையே ஆசிரியர் புகுத்தியுள்ளார். அக்கதைகளில் "ஆகவே எல்லாம் நலமாக முடிந்தது" போன்ற கர்நாடக பாணி இல்லை. இன்றைக்கு நடப்பை எடுத்துச் சொல்வதோடு இப்படி இருந்தால் நல்லாயிருக்குமோ? என்ற உணர்வை படிப்பவர் மனதில் உருவாக்கியுள்ளார்.
உதாரணத்திற்கு.....
சபர் மாதம் கல்யாணம் வைக்கக் கூடாது என வாதிக்கும் பஞ்சாங்கப் பேனலுக்கு ஒரு ஹாஜியார் "சபர் மாதம் பீடை இல்லை" என்ற நபிமொழியை எடுத்து வைக்கும் கதை இப்படி முடிகிறது. "ஹாஜியார் சொல்வதாலும், அதில் நியாயம் இருப்பதாலும் அக்கூட்டம் ஏற்றுக் கொண்டது. கடைசிக் கதையில் ஆலிம்சாவிடமே காய்கறிகளைப் பற்றி புலம்பும் வியாபாரி, அவர் அநியாய விலை வைக்கும் வியாபாரி சம்பந்தமான நபிமொழி சொன்ன பிறகும் அவருக்குத் தெரியாமலேயே ஐந்து ரூபாய் இலாபம் வைத்து விற்றான் என்று முடியும் கதை.
இது போன்றே, "நீங்கள் உபதேசித்துக் கொண்டே இருங்கள். நல்லவர்கள் அதில் பயன்பெறுவர்" என்ற குர் ஆன் வசனத்தின் அடிப்படையில் நபிமொழி நமது வாழ்க்கை முழுவதும் செம்மைப் படுத்தும் என்ற செய்தியும், ஆனால் சமுதாயத்தின் சொற்பமான மக்களே இது குறித்து விழிப்புணர்வு பெறுகிறார்கள் என்ற ஆதங்கமும் தொனிக்கிறது.
சாம்பிளுக்கு ஒரு கதை........
வர்ணனை
"பக்கத்து வீட்டுக்கு ஆள் வந்தாச்சா?" அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த தாகிர், மனைவியிடம் கேட்டான்.
"ஆமாங்க" மனைவி ஜசீலா சொன்னாள்.
"யாராம்"
"உடன்குடி அம்மாவும், சின்னப் பையனும்தான். வீட்டுக் காரர் துபாயில்"
"சரி சாப்பாடு எடுத்து வை"
"என்னால நம்ப முடியலீங்க"
"ஆபீஸ்லயிருந்து சீக்கிரம் வந்ததையா?"
"இல்லே. அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குன்றத"
"அவ கல்யாணத்துக்கு உன்ன அழைக்கலேன்னு அப்படி சொல்றியா?"
"அதச் சொல்லலே. அவ்ளோ இளமையாத் தெரியுரா"
"எவ்ளோ இளமையா?"
"நடிகை மாதிரி ரொம்ப அழகா"
"ம்"
"நம்ம ஐஸ் மாதிரி"
"யாரு ஐஸ்வர்யா ராய் மாதிரி. அப்புறம்?"
"சிரிச்சா சில்லறை கொட்டின மாதிரி. நடந்தா தேர். கன்னத்துல குழி. பட்டாம்பூச்சிக் கண்ணு. அடர்த்திப் புருவம். சங்குக் கழுத்து. ரங்கோலி சாரி. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்........"
"கொஞ்சம் நிறுத்தறியா?" தாகிர் கத்தினான்.
"என்னங்க?" கணவனை கணவனை மிரட்சியாய் பார்த்தாள்.
"ஒரு பெண் இன்னொரு பெண்ணை தன கணவனிடத்தில் அவன் பார்ப்பது போன்று வர்ணிக்கக் கூடாதுன்னு நம்ம நபி சொல்லியிருக்காங்க.(அபூசயீத் (ரழி) / புகாரி) எல்லாத்தையும் மிகயாச் சொல்றே. நீ அந்தப் பொண்ணு விஷயத்திலேயும் மிகையாப் பேசுறே. எனக்கு மனம் சபலப்பட்டா என்ன செய்யிறது?"
அவள் "சாரி" என்றாள். அவன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

இது கதை பிளஸ் மஸ் அலா. ஒவ்வொரு குடும்பத்திலும், குறிப்பாக மனைவியை மட்டும் விரும்பும் கணவர்களுக்கு ஏற்ப்படும் இம்சை இது. சபல புத்தி உள்ள கணவர்களிடம் மனைவிகள் இப்படிப் பேசுவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) இப்படிப் பேசி கணவனின் சபலத்தை தூண்டும் பெண்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்கள். இதை ஆசிரியர் நடைமுறை கூறி விளக்கும் பாணி ரத்தினச் சுருக்கம்.
ஒரு புத்தகம் வாங்குங்கள். ஓராயிரம் புத்தகம் வாங்க சிபாரிசுப்பீர்கள். இன்ஷா அல்லாஹ்.
ஆசிரியர் : ஹாபிழ் எம் ஏ சாகுல் ஹமீத் ஜலாலி,
பேராசிரியர் ரியாழுள் ஜினான் அரபிக் காலேஜ்
பேட்டை. திருநெல்வேலி 627004
அலைபேசி: 97884 93468
பக்கம்: 192 +4
கதைகள்: 187
வெளியீடு: நிவேதிதா புத்தகப் பூங்கா,
14 /260 இரண்டாவது தளம், பீட்டர்ஸ் சாலை ராயப்பேட்டை. சென்னை 600014 .
அலைபேசி: 98847 14603 .
விலை: 90 ரூபாய்.மட்டும்.