Thursday, September 13, 2012

இப்படியா அசிங்கப்படுத்துவது?

ஆலிம்களுக்கு நம் சமுதாயம் கொடுக்கும் அன்பளிப்புகளுக்குப் பெயர் கை மடக்கு. கையில் மடக்கி யாருக்கும் தெரியாமல் தரப்படும் அன்பளிப்பில் ஒரு ரூபாயும் இருக்கலாம். ஓராயிரம் ரூபாயும் இருக்கலாம் . பின்னாளில் அது கவர்களுக்கு இட மாற்றம் ஆன போதும் இந்த ரகசியம் காக்கப்பட்டது.
ஆனால் ஆலிம்களுக்கு தன்மானம் போய் விட்டதா? அல்லது கொடுப்பவர்கள் ஆலிம்களை யாசகர்களாக   எண்ணுகிறார்களா? விளங்கவில்லை. ரமளானுக்கு ரெண்டு மாதங்களுக்கு முன் கும்பகோணம் பிரபல ஆலிம் மர்ஹூம் அவர்களின் பிள்ளைகளால் வழங்கப்படும் ரமளான் அன்பளிப்புக்காக அவர்களின் ஏஜண்ட்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் டேரா அடித்து அந்தப் பகுதிக்கு ஆலிம்களை மொத்தமாக வரவழைத்து, அவர்களின் பதிவுகள் புதுப்பிக்கப் படுகிறது.
ஆயிரத்தெட்டு கேள்விகளின் பின் சொந்தப் பள்ளிவாசல்களின் இரண்டு வக்துகளை மவ்த்தாக்கிய பின் அவர்கள் விடுவிக்கப்பட்டு, ரமளான் வந்து விட்டால், ஒரு நாள் குறித்து அன்றும் இதே போன்று அந்த ஏஜண்ட்கள் முன் ஆஜராகி, தன் பெயரை சொல்லி தனக்கு வந்துள்ள பணத்தை, துணியை வாங்கிச்செல்லும் அவலம் நடக்கிறது.
இன்னொருவர் புதுக்கோட்டை பணக்காரர். அவர் இப்படியெல்லாம் மெனக்கெடுவதில்லை. "புதுக்கோட்டைக்கு வா! தர்றேன்!. இல்லையா! போ" இருக்கிற இடத்திலிருந்தே படியளக்கிறார் அந்த பகவான். இரண்டுக்கும் போட்டி போட்டு முண்டியடிக்கும் மரியாதைக்குறிய, மதிப்பிற்க்குரிய, மவ்லானாக்களை, கிப்லாக்களை நினைக்கும்போது, அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் கோடவுன்களில் யாசகர்களை அடைத்துப் போட்டு இருபத்தேழாம் நாள் யாசகம் தரும் பணக்காரர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.
ஆலிம்களே! அன்பளிப்புகள் தருகிறவர்கள் உங்களைத் தேடி வரட்டும். பணக்காரர்களே! ஆலிம்கள் மறந்த கண்ணியத்தை அன்பளிப்புகளை அவர்களைத் தேடிக் கொடுப்பதன் மூலம் நீங்களாவது காப்பாற்றுங்கள். இன்னொரு உண்மை. உங்கள் அன்பளிப்பு  ஸக்காத் பணத்திலிருந்து என்றால், பணியிலிருக்கும் எந்த ஆலிமும் அதைப் பெற அருகதை இல்லை.  பணியில் இல்லாதவரும்  தன் கண்ணியம் கருதி வாங்க மாட்டார்.
சிந்தியுங்கள்.

0 comments:

Post a Comment