Friday, February 15, 2013

காலத்தை வென்ற காருண்ய நபி (ஸல்)

பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். தான் பிறந்த நாளிலிருந்து உலகம் இறக்கும் நாள் வரை தன்னைப் பற்றி தரணி பேசிக்கொண்டே இருக்கும்படியான தகுதி மிக்க வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே. அவர்களை நேசிப்பவர்கள் அவர்களின் புகழுரைகளை, அவர்களின் புகழால் புழுக்கமுற்றவர்கள் தூற்றல்களை இன்றளவும் இறைத்துக் கொண்டிருக்கும் இறவாப் பெருமைக்குரியவர்கள் பெருமான் நபி (ஸல்) அவர்கள்.
வாளெடுத்து வெட்ட வந்த வாலிபர் உமர் (ரழி) அவர்கள்தன் வாழ்க்கையையே வள்ளல் நபிகளாரின் வளமார் கரங்களில் ஒப்படைத்தார். உம்மை விட வெறுப்பான முகம் எனக்கு வேறில்லை என்று வேவு பார்க்க வந்த துமாமா, உம்மைப்போல் பிரியமிக்க முகம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று இறுமாந்து போனார்.
அவர் எங்களுக்குப் பிடிக்காதவர்தான். ஆனால் பொய் மட்டும் அவர் சொன்னதில்லை என்று ஹெர்குலிஸ் மன்னர் முன் ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர் அண்ணலாரின் எதிரி அபூஸுஃப்யானாக இருந்து தோழராக பின்னாளில் மாறியவர். 
தஞ்சம் தேடி வந்த தோழர்களை தடுத்து மீண்டும் தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று தர்ம அடி கொடுக்க முனைந்த எதிரிகள் வைத்த குற்றச்சாட்டையே அவர்களுக்கு எதிராகத் திருப்பி, “நீங்கள் சொன்னவைகள் குற்றச்சாட்டுகளல்ல. ஒரு குணக்குன்றின் அடையாளங்கள்என அறைந்தாற்போல் சொல்லி அலற வைத்தவர் அபிஸ்ஸீனிய மன்னர் நஜ்ஜாஷி.
பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லேஇது பன்ச் டயலாக் அல்ல. பார் போற்றிய பயகம்பரின் மதீன அரசாட்சி கண்டு அலறி அடித்து, “எங்கே தன் காலடிக்கே வேட்டு வந்து விடுமோஎன பயந்து பயந்து செத்த பாரசீக ரோம ஆட்சியாளர்களையும்,  அது போன்றே அவர்களின் தேவையற்ற சீண்டல்களால் தடங்கள் அழிந்து போனவர்களாகவும் அவர்களை உலகம் கண்டது,  
அன்று தொடங்கி இன்று வரை பல அழுக்காறுகள் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டாலும், என்றும் நீங்காத சுய புகழ் வலிமைக்கு சொந்தக்காரராக நிமிர்ந்து நிற்கும் பெருமை அவர்களுக்கு மட்டுமே உண்டு.
இன்றைய முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லை என்பதாலேயே நபிகளார் (ஸல்) அவர்கள் மீது சினிமா, இணையம் உள்ளிட்ட மீடியாக்கள் தொடர்ந்து தங்கள் இயலாமை களால் எச்சில்  துப்பினாலும், முஸ்லிம்களின்  துணையின்றியே அவைகளின் வேரறுக்கும் வலிமை அண்ணலாரின் வாழ்க்கை என்னும் சத்தியத்திற்கு உண்டு. அன்றும். இன்றும். என்றும்.
மீலாது வாழ்த்துக்கள்.