Sunday, November 6, 2011

ஆண் என்ற அகம்பாவத்தை குர்பானி கொடுங்கள்

மீண்டும் ஒரு ஹஜ்ஜுப் பெருநாள் மலர்ந்துள்ளது. அதே ஆடு மாடுகளின் குர்பானி. அதே இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாக வரலாறு, அதே தக்பீர் முழக்கங்கள்......... இத்யாதி, இத்யாதி.
இதைத்தாண்டி என்ன இருக்கிறது?
இருக்கிறது. அதுதான் நீங்கள் ஆண்மகனாக இருந்தால், உங்கள் ஆண்மைத் திமிரை அறுத்தெறியுங்கள்.... என்ற செய்தி.
வயதான காலத்தில் இப்ராஹீம் (அலை) ஹாஜரா ஜோடிக்கு இஸ்மாயீல் (அலை) என்ற மகவு பிறக்கிறது. குழந்தைப் பருவத்தையும் கடக்கிறது. அதன் பிறகே அதை அறுத்து பலியிடும் கனவு... அதைத் தொடர்ந்த காட்சிகள் நடக்கின்றன.
கொஞசம் சிந்தியுங்கள். இங்கே ஒரு தெளிவு. அல்லாஹ்வைப் பணிவதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. ஆண் பிள்ளையைப் பெற்றதால் யாரும் உயர்ந்து விடவோ, பெண் பிள்ளையைப் பெற்றதால் யாரும் தாழ்ந்து விடவோ போவதில்லை.
அல்லாஹ்வைப் பணிந்த இம்ரானின் மகள் மர்யமும், அதே அல்லாஹ்வைப் பணிந்த இஸ்மாயீலும் ஒரே தரத்தில் அல்லாஹ்வால் குர் ஆனில் சிலாகித்துச் சொல்லப் பட்டதன் மூலம், தன்னை அற்பமாக என்னும் மனிதனே சிறந்தவ னாகிறான்.
அதிலும் அல்லாஹ் தனக்காக பலியிடுமாறு அறிவுறுத்தியது ஆண் மகனை, அதுவும் தவமாய் தவமிருந்து பெற்றவனை என்பதில் இருந்து அறுத்து பலியிட ஏவப்பட்டது மகனை அல்ல. "ஆண் என்கிற அந்த ஆளுமைத்திமிரை" என்பதை மனித சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஹஜ்ஜுப் பெருநாள் திரும்பத் திரும்ப வந்து உணர்த்தும் செய்தி.
ஆண்மைத் திமிர் எவ்வளவு கொடியது?
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விவாகரத்துக்கு பல படிகள் உண்டு. முதலில் ஒரு தலாக். அதன் பின் இணைய வாய்ப்பிருந்தால் இணையலாம். பிறகும் முறுகல் நிலை வந்தால் மீண்டும் ஒரு தலாக். அதிலும் ஒரு மாதத்தில் நிலைமை சரியானால் இணையலாம்.
மீண்டும் அதே நிலை நீடித்தால் சொல்லப்படும் விவாகரத்து வார்த்தை இறுதியானது. இது குடும்பத்தில் அடிக்கடி புரியாத்தன்மையால் ஏற்படும் நிலைமைகளுக்கு இஸ்லாம் தரும் சுமூகத் தீர்வு.
ஆனால், பெண் கணவனுக்கு துரோகம் செய்து சோரம் போய் விட்டால், அல்லது கணவன் மனைவியை துன்புறுத்தி இன்பம் காணும் மன நோயாளியாக இருந்தால், கணவன் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் கொடுக்கலாம். அது போன்றே மனைவி குல்உ (குலா) முறையில் மூன்று தலாக் வாங்கிக் கொள்ளலாம்.
இன்று இதே சமுதாயத்தில் நடப்பது என்ன?
தமிழ் முஸ்லிம் பெண்களிடம் அவர்களாகக் கேட்கும் நியாயமான குலா முறை கூடத் தெரியாமல் அநியாயமான முறையில் ஆணுக்கு அடிமையாகவே சித்திரவதை படும் பெண்கள் அதிகம்.
அதை விட சோரம் போவது (விபச்சாரம்) போன்ற விஷயங்களல்ல, வரதட்சனை பாக்கி, கறப்பதற்கு பெண்ணிடமோ, பெண்ணின் தகப்பனி டமோ ஒன்றுமில்லை என்ற நிலை, கணவனின் உட்ன்பிறப்புகளுக்குப் பிடிக்கவில்லை, கணவனின் தப்புகளுக்குத் துணை போகவில்லை...... இது போன்ற சொத்தை காரணங்களுக்காக ஒரே நேரத்தில் மூன்று தலாக் கொடுக்கப்பட்டு அபலை ஆகும் பெண்களும், ஆணைப் பெற்றவள் என்ற மகாத் திமிரின் காரணமாக மாமியாரால் விரட்டப்படும் பெண்களும் நம் சமுதாயத்தில் எத்தனை? எத்தனை?
இன்னொன்று,
ஒரு ஆண் பொருளாதாரத்தில், நீதியில், அளவுக்கு மிஞ்சிய உடல் தேவைகளில் மிகைத்திருந்தால், ஒரு பெண்ணுக்கு மேல் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கூட மணமுடிக்க அனுமதி உண்டு. பலதார மணத்திற்கு ஆயிரத்தெட்டு கண்டிஷன் உண்டு.
நான் ஆண்பிள்ளை எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணுவேன் என்று திமிர் பேசி, முதல் மனைவியை பழி வாங்க இன்னும் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்தாலும், அல்லது ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணு என்ற கணக்கில், அமேரிக்க பிச்சைக்கார மாப்பிள்ளைகள் அங்கேயும் ஆசைக்கு எவளையாவது சேர்த்துக் கொண்டு, அத்தா அம்மா ஏமாந்துறக் கூடாதுண்ணு, வரதட்சணை பேசி, இன்னொரு கல்யாணம் செய்தாலும் இஸ்லாமிய ஷரீஅத்தில் அது தண்டணைக்குரிய குற்றம்.
இன்றைக்கு இதெல்லாம் பார்க்கப்படுகிறதா?
பஞ்சாயத்துப் பண்ண வேண்டியவனே இந்த வேலைகளை முன்னின்று செய்கிறான்.
அது மாதிரியே இன்னொரு கொடுமை. மஹர் மாப்பிள்ளை என்ற பெயரில் வருகிற தீவிரவாதி. சில ஆன்மிகக் கோமாளிகள் நடத்தி வைத்த இது மாதிரியான கல்யாணங்கள், பசையுள்ள இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய சைட் டிஷ் ஆக நடந்த திருமணங்களாகவே முடிந்துள்ளன.
ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய மக்களிடமும் புரையோடிப்போயிருக்கும் ஆண்மைத்திமிரை அழித்து ஒழியுங்கள் என்பதைச் சொல்லவே வருடா வருடம் ஹஜ்ஜுப் பெருநாளும் அதை ஒட்டிய சிந்தனைகளும் மாறி மாறி வந்து ஆண்மைத்திமிரை காவு கொடுக்க, அல்லாஹ்வுக்கு பயந்த ஆண்மகனாக வாழ வலியுறுத்துகின்றன.
செய்வோமா?
ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்....!

Tuesday, July 26, 2011

இருக்கு........(பள்ளிக்கூடம்) ஆனா.... இல்லே........(பாடம்)

ஆட்சி மாற்றம் புரட்சித் தலைவியை மட்டுமல்ல், ஒரு வரலாறு காணாத புரட்சியையே கொண்டு வந்து விட்டது. ஆம்

150 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், 5 ஆண்டு கால உழைப்பு, NCERT என்னும் மத்திய அரசு கல்வி மையத்தின் ஒப்புதல் (அதனாலேயே முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சென்ற வருடமே சமச்சீர் கல்வி ஆரம்பம், சர்வ தேச பாடப் புத்தக வெளியீட்டாளர்கல் சமச்சீர் புத்தகங்கள் அச்சிட்டுக் கொள்ள அரசிடம் அனுமதி வேண்டியது.........இருநூற்றுச் சொச்சம் கோடி செலவு)
இவை அனைத்தையும் கொஞசம் கூட சட்டை செய்யாமல், பள்ளிக்கூடம் உண்டு, ஆனால் பாடம் இல்லை புரட்சி இரண்டு மாதமாக நடக்கிறது.

காரணம் அதில் அய்யா (கலைஞர்) மூஞ்சி தெரிகிறது. ( செம்மொழிப் பாட்டாக, சுய புராணமாக, அய்யாவின் புத்திரி கனிமொழியின் லிமிடட் கம்பெனி சென்னை சங்கமத்தின் அறிமுகமாக) எப்படிப் பொறுக்கும் அம்மா மனம்...?
கல்வியே போனாலும் கவலையில்லை, மாணாக்கர்களின் மன உளைச்சல் அதிகமானாலும் கவலையில்லை என்று தன் மன வீரியத்திற்காக இரண்டு மாதக் கல்வியை காவு வாங்கியிருக்கிறார்.

நாம் கேட்பதெல்லாம் இதுதான்,

அம்மா வந்தால் தன் முகம் இருப்பதாலேயே சமச்சீர் புறக்கணிக்கப்படும் என்று முத்தமிழறிஞருக்கு தெரியாதா? மே மாதம் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்பதும், தேர்தல் முடிவு அப்போது வெளியாகும் என்பதும், ஒருவேளை தான் தோற்றுப் போனால் சமச்சீர் கல்வியையாவது காப்பாற்ற (இருநூற்றுச் சொச்சம் கோடியையும் சேர்த்து) மேற்கண்ட பிரதாபங்களை நீக்கியிருக்க வேண்டும்.

என்ன செய்ய...!

ஒரு அசாத்திய நம்பிக்கையில் தானே நிரந்தர முதல்வராக இருப்போம் என்ற கனவில் இவ்வளவு நஷ்டத்திற்கும் மறைமுக காரணமாக இருந்திருக்கிறார்.
அது சரி!

ஆட்சிக்கு வருவோம் என்று அம்மாவும் நினைக்கவில்லை.
ஆட்சி பறிபோகும் என்று அய்யாவும் எதிபார்க்கவில்லை.

இன்று அம்மா திருவாய் மலர்ந்திருக்கிறார். இத்தனை தொங்கோட்டத்துக்குப் பின், தான் தோற்று விடுவோமோ என்ற பயத்தில், "தான் செய்த சேட்டையை (அப்பீல் செய்ததை) பிரதிவாதிகள் செய்து, மக்கள் காரி கழிஞ்சு துப்புவதற்க்கு முன், தானே முன் வந்து, "அவர்கள் (முந்தய ஆட்சியாளர்கள்) நீதிமன்றம் மூலம் இக்கல்வியை கொண்டு வரவில்லை என்பதால் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தினோம். நீதிமன்றம் சொன்னால் அமல்படுத்துவோம்"

இப்படித்தானா என்று தெரியவில்லை. திடீருனு பிரதிவாதிகள் அப்பீல் செய்ய, அம்மா அப்பீல் செய்ய, பிள்ளைகள் பாடு கொண்டாட்டம்தான்.....!

அம்மா அடிமைகளும், ஊடக புலிகளும் இப்படிச் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை, "அம்மா அசாத்திய தீர்க்கதரிசி. ரொம்பக் காலமாக படிப்பின் பெயரால் பிள்ளைகள் விளையாட்டே இல்லாமல் அடிமையாக்கப் பட்டு விட்டனர். அம்மாவின் புண்ணியத்தில் ஒரு முழு வருடம் பள்ளிக்கூட அறையையே விளையாட்டு மைதானமாக்கி விட்டார்.

என்னே புரட்சி....!"

மொத்தத்தில் அய்யாவும் அம்மாவும் தமிழ் நாட்டு மக்களின் நிரந்தர ஆயுள் தண்டனையின் அடையாளங்கள் என்பது மட்டும் உண்மை......!

ஆலிம்கள் ஜாக்கிரதை....!

புதிய ஆலிம்களின் அணி மத்ரஸாக்களிலிருந்து சமுதாயப் பணிக்காக புறப்பட்டு விட்டது. தற்காலத்தில் இந்த ஆலிம்கள் மார்க்கப் பணிக்காகத்தான் வருகிறார்கள் என்று ஒட்டு மொத்தமாய் சொல்ல முடியாவிட்டால் கூட, அதில் ஒரு குழுவாவது மார்க்கப் பணியை நோக்கமாகக் கொண்டே மத்ரஸாவுக்கு வந்திருப்பார்கள். அவர்களைப் பற்றியே இப்பதிவு.
நண்பர்களே! உங்களின் இந்த ஆன்மிகப் பயணம் நீங்கள் திட்டமிட்டு செயலாற்றினால் சமுதாய மாற்றத்தை உண்டாக்கும். காரணம் ஆலிம்களை நம்பும் அளவு நமது சமுதாயம் யாரையும் நம்புவதில்லை. அது போன்றே ஆலிம் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று விரும்புகிற அளவு வேறு யாரையும் விமர்சனம் செய்வதில்லை.
நபிகள் நாயகத்தின் சின்னச் சின்ன அசைவுகளும் ஆலிம்சாவிடத்திலாவது முழுமையாக இருக்க வேண்டும். அது நமது வாழ்வின் மாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயம் விரும்புகிறது.
அதனால்தான் தொப்பி போடாத ஆலிம்சாவை ஆலிமாகவே சமுதாயம் மதிப்பதில்லை. இது சுன்னத் ஜமாத் ஆலிம்களாகிய உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, பிரிவினை ஆலிம்சாக்களுக்குநன்றாக புரிந்திருக்கிறது. அதனால்தான் மவ்லித் ஓதாதே என்றும், கூட்டு து ஆ ஓதாதே என்றும், (சென்ற அல்ஹிந்தில் வந்தது போல் நபித்தோழர்களை இழிவுபடுத்து என்றும் ஒரு தொப்பி போட்ட ஆலிம்சா சொன்னதால்தான் எடுபட்டது. (பிரிவினைவாத ஆலிம்சாக்களிலும் தொப்பியே போடாதவர்கள் இருக்கிறார்களே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர்களெல்லாம் இந்த தொப்பி போட்ட ஆசாமி துப்பிய எச்சில்கள்) தொப்பி போடாதே என்று கூட தொப்பி போட்டுக்கொண்டே சொன்னதுதான் வேடிக்கை)
ஆலிம்களை சமுதாயம் உச்சி முதல் உள்ளங்கால் வரை மோப்பம் பிடிப்பதாக ஆலிம்கள் அலுத்துக் கொள்வதுண்டு. நான் அதை பெருமையாக எண்ணுகிறேன். காரணம், நான் நன்றாக இருக்க வேண்டும் எனறு எண்ணக்கூடிய, என்னை நல்லவனாகவே வைத்திருக்க எண்ணும் மக்களை என்னைச்சுற்றி வைத்திருக்கும் அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். .
இனி புதிய ஆலிம்களுக்கு மட்டுமல்ல், ஜமா அதுல் உலமாவுக்கு எச்சரிக்கை தரும் செய்தி ஒன்று சொல்லப் போகிறேன்.
நான் மேலே சொன்னது போல, சமுதாயம் ஆலிம்களை, அதுவும் சுன்னத் ஜமாத் மத்ரஸாக்களிலிருந்து வெளிவரும் ஆலிம்களை மட்டுமே ஆலிமாக மதிக்கிறது என்பதால், ஷவ்வால் தொடங்கி, ஷஃபான் முடியும் வரை நடைபெறும் சன்மார்க்க மத்ரஸாக்களிலிருந்து (ஜூன் தொடங்கி, ஏப்ரல் வரை நடைபெறும் வெஸ்டர்ன் டைப் மத்ரஸாக்கள் அல்ல) வெளிவரும் ஆலிம்களை கொத்திச் செல்ல வித விதமான கூட்டங்கள் காத்திருக்கின்றன.
மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன், "சுன்னத் ஜமாத் மத்ரஸாக்களின் ஆலிம்கள் பெருமை, அந்த ஆலிம்களை விட, பிரிவினைவாத இயக்கங்களுக்குத்தான் நன்றாகத் தெரிகிறது". எனவே லேட்டஸ்ட்டாக ஒவ்வொரு இயக்கத்திலும் ஆலிம்கள் அணி உருவாக்கப்பட்டு, அதற்காக வலை வீசப்படுகிறது.
சில மாவட்ட ஜமா அத்துல் உலமா அமைப்பிலும் வித விதமான இயக்க ஆலிம்கள் இருப்பது வேதனையாக இருக்கிறது. வன்மையான வட்டாரத் தலைமை உள்ள அமைப்பில் இவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்பதும், இவர்களே பயப்படுவதும் நடக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
ஆனால் சில வட்டார சபைகளில் ரக ரகமான ஆலிம்சாக்கள் இருப்பது மனவேதனையை உண்டாக்குகிறது. (தவ்ஹீத் ஆலிம்சா, த மு மு க ஆலிம்சா, எம் என் பி ஆலிம்சா, ஐ எஃப் டி ஆலிம்சா இப்படி)
தயவு கூர்ந்து சுன்னத் ஜமாத் மத்ரசாக்களிலிருந்து வெளிவரும் புதிய ஆலிம்கள் இந்தக் கச்சடாக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் தின்ற சோறுக்கு மக்களிடமும், பெற்ற கல்விக்கு துரோகம் செய்வதற்க்கு அல்லாஹ்விடமும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ஜமா அத்துல் உலமா தனக்குள்ளே புகுந்துள்ள பிரிவினை ஆலிம்களை (மன்பயீ, ஜமாலி, பாக்கவி, இம்தாதீ................ இப்படி) இனம் கண்டு வெளியேற்ற வேண்டும். இல்லையேல், 80 களில் ஜமா அத்துல் உலமாவையே ஃபோர்ஜரி பண்ண எண்ணி, அப்பெயரை களவாட எண்ணிய பிரிவினைவாதிகளிடம் இருந்து ஜமா அத்துல் உலமாவைக் காப்பாற்ற, "சுன்னத் வல் ஜமா அத் ஜமா அத்துல் உலமா" என்று ரெஜிஸ்டர் செய்ததற்கு எந்த பலனும் இல்லாமல் போய்விடும்.
ஜாக்கிரதை......................!!!

Thursday, April 28, 2011

அல்ஹிந்த் - ஓர் அறிமுகம்


மதுரை குருவிக்காரன் சாலையிலிருந்து வெளி வந்துள்ள ஒரு புதிய பார்வையில் இஸ்லாமியர் உணர்வைச் சொல்லும் மாத இதழ். இஸ்லாமியப் பத்திக்கைகளில் இருந்து மாறுபட்ட பரிமாண இதழ்.

அல்ஹிந்த் பெயருக்காக ஆசிரியர் டெல்லி வரை சென்று போராடிய போராட்டத்தில் ஒன்று புரிந்தது. அதிகார வட்டம் எந்த அளவு இஸ்லாமியரை இந்திய வட்டத்துக்குள் விடாது தனித்து வைக்க விரும்புகிறது என்பது.

அல்ஹிந்த் என ஏன் பெயர் வைக்கிறாய்? உனக்கு சம்பந்தமில்லாத பெயர் அல்லவா? என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுமையாக ஆசிரியர் பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கிறது.

அல்ஹிந்த்- இந்தியாவுக்கு நபிகளார் காலத்தில் தெரிந்த பெயர்.

அல்ஹிந்த்- அரபு முஸ்லிம் பெண்களுக்கு வைக்கப்பட்ட பெயர்.

அல்ஹிந்த்- சிந்து நதியோரம் இருந்ததால் அரபி வருகையாளர்கள் வைத்த பெயர்.

இப்படி ஆயிரமாயிரம் நியாயங்கள் (முஸ்லிம்கள் இந்தியாவை அல்ஹிந்த் என்று அழைக்க) உண்டு.

இதன் அடிப்படையில் வெளிவந்துள்ள இந்திய மயமான இஸ்லாமிய இதழ் இது. அதற்குத் தகுந்தாற்ப்போல் இதன் உள்ளீடான கட்டுரைகளும் இந்திய முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை, இஸ்லாமியப் பெயரில் வியாபாரம் செய்யும் எந்த இயக்கத்தை விடவும் வலிமையாகச் சொல்லும் இதழ்.

படித்தால் பிடித்துப் போகும் பண்பட்ட பத்திரிக்கை.

ஆசிரியர்: முற்போக்கு உலமா சபையின் முக்கியஸ்தரான வலிமையான எழுத்தாளர் முஹம்மத் ரபீக் மிஸ்பாஹி.

வெளியீட்டாளர் :
  • 1990 களில் தினமணி பத்திரிக்கையின் இஸ்லாமிய கட்டுரைகளை அதிகம் வரைந்தவர். நான் எழுத்தாளனாக, உந்து சக்தியை (அவர் துரோணராக இருந்து ஏகலைவனாக நான் இருக்க) என்னுள் வளர்த்தவர்.
  • என்னை விட இளையவர். உலகை உணர்ந்ததில், வேஷதாரிகளை அடையாளம் கண்டதில், அனுபவம் மிககதில், தெளிவாக, நேரடியாகப் பேசுவதில், எழுத்தில் என்னை விட வலியவர்.
  • அவர் எழுதிய எழுத்துக்களை இருபது வருடங்களுக்குப் பின் படிக்கும்போதும், இன்றைக்குப் புரிவது அன்றைக்குப் புரியாமல் போயிற்றே! என்ற வருத்தம் என்னுள் எழுவதுண்டு. பிரபல வெகுஜன எழுத்தாளர்களின் நண்பன். வலிமையான மாத இதழ்களின் வெளியீட்டாளர்.


ஆம் சதக்கத்துல்லாஹ் ஹஸனி. பெயர் சொன்னாலே பலருக்கு விளங்கும்.

அறிமுகம் போதும்.

இனி அல்ஹிந்த் பற்றி:
வருட சந்தா 120  ரூபாய்
மாதம் இரு முறை இதழ்.
தனிப்பிரதி 5 /- மட்டும்.

முகவரி:
அல்ஹிந்த் மாதமிருமுறை.
5 / 43  யூனிகார்ன் காம்ப்ளெக்ஸ்
குருவிக்காரன் சாலை, (அர்விந்த் கண் மருத்துவமனை பக்கம்)
மதுரை 20 

Thursday, March 24, 2011

மஸ் அலா கதைகள் -ஒரு மதிப்பீடு

என் நண்பன் ஹாபிழ் எம் ஏ சாகுல் ஹமீத் ஜலாலியின் மஸ் அலா கதைகள் சென்ற மாதம் வெளி வந்துள்ளது. சென்னை நிவேதிதா பதிப்பகத்தின் வெளியீடு இது என்பது ஆச்சரிய செய்தி. காரணம் முழுக்க முழுக்க இஸ்லாமிய ஆன்மிக வெளியீட்டை இஸ்லாமியர் அல்லாத சகோதரர் வெளியிட்டுள்ளது இந்த புத்தகத்தின் இன்னொரு கோணத்தை தெளிவு படுத்துகிறது. ஆம்.
இது முதலில் குறளோவியம் போல் ஹதீசோவியம். ஒவ்வொரு ஹதீசையும் ஒவ்வொரு வாழ்க்கை நடைமுறை பின்னணியில் எடுத்துச் சொல்லும் புதிய பார்வை. இதில் குட்டிக் கதை உண்டு. அக்கதையில் ஒரு நபிமொழி உண்டு. அக்கதையில் கண்ணுக்குத் தெரியாத எதார்த்தம் உண்டு. நவீனத்துவ கதைகளையே ஆசிரியர் புகுத்தியுள்ளார். அக்கதைகளில் "ஆகவே எல்லாம் நலமாக முடிந்தது" போன்ற கர்நாடக பாணி இல்லை. இன்றைக்கு நடப்பை எடுத்துச் சொல்வதோடு இப்படி இருந்தால் நல்லாயிருக்குமோ? என்ற உணர்வை படிப்பவர் மனதில் உருவாக்கியுள்ளார்.
உதாரணத்திற்கு.....
சபர் மாதம் கல்யாணம் வைக்கக் கூடாது என வாதிக்கும் பஞ்சாங்கப் பேனலுக்கு ஒரு ஹாஜியார் "சபர் மாதம் பீடை இல்லை" என்ற நபிமொழியை எடுத்து வைக்கும் கதை இப்படி முடிகிறது. "ஹாஜியார் சொல்வதாலும், அதில் நியாயம் இருப்பதாலும் அக்கூட்டம் ஏற்றுக் கொண்டது. கடைசிக் கதையில் ஆலிம்சாவிடமே காய்கறிகளைப் பற்றி புலம்பும் வியாபாரி, அவர் அநியாய விலை வைக்கும் வியாபாரி சம்பந்தமான நபிமொழி சொன்ன பிறகும் அவருக்குத் தெரியாமலேயே ஐந்து ரூபாய் இலாபம் வைத்து விற்றான் என்று முடியும் கதை.
இது போன்றே, "நீங்கள் உபதேசித்துக் கொண்டே இருங்கள். நல்லவர்கள் அதில் பயன்பெறுவர்" என்ற குர் ஆன் வசனத்தின் அடிப்படையில் நபிமொழி நமது வாழ்க்கை முழுவதும் செம்மைப் படுத்தும் என்ற செய்தியும், ஆனால் சமுதாயத்தின் சொற்பமான மக்களே இது குறித்து விழிப்புணர்வு பெறுகிறார்கள் என்ற ஆதங்கமும் தொனிக்கிறது.
சாம்பிளுக்கு ஒரு கதை........
வர்ணனை
"பக்கத்து வீட்டுக்கு ஆள் வந்தாச்சா?" அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த தாகிர், மனைவியிடம் கேட்டான்.
"ஆமாங்க" மனைவி ஜசீலா சொன்னாள்.
"யாராம்"
"உடன்குடி அம்மாவும், சின்னப் பையனும்தான். வீட்டுக் காரர் துபாயில்"
"சரி சாப்பாடு எடுத்து வை"
"என்னால நம்ப முடியலீங்க"
"ஆபீஸ்லயிருந்து சீக்கிரம் வந்ததையா?"
"இல்லே. அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குன்றத"
"அவ கல்யாணத்துக்கு உன்ன அழைக்கலேன்னு அப்படி சொல்றியா?"
"அதச் சொல்லலே. அவ்ளோ இளமையாத் தெரியுரா"
"எவ்ளோ இளமையா?"
"நடிகை மாதிரி ரொம்ப அழகா"
"ம்"
"நம்ம ஐஸ் மாதிரி"
"யாரு ஐஸ்வர்யா ராய் மாதிரி. அப்புறம்?"
"சிரிச்சா சில்லறை கொட்டின மாதிரி. நடந்தா தேர். கன்னத்துல குழி. பட்டாம்பூச்சிக் கண்ணு. அடர்த்திப் புருவம். சங்குக் கழுத்து. ரங்கோலி சாரி. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்........"
"கொஞ்சம் நிறுத்தறியா?" தாகிர் கத்தினான்.
"என்னங்க?" கணவனை கணவனை மிரட்சியாய் பார்த்தாள்.
"ஒரு பெண் இன்னொரு பெண்ணை தன கணவனிடத்தில் அவன் பார்ப்பது போன்று வர்ணிக்கக் கூடாதுன்னு நம்ம நபி சொல்லியிருக்காங்க.(அபூசயீத் (ரழி) / புகாரி) எல்லாத்தையும் மிகயாச் சொல்றே. நீ அந்தப் பொண்ணு விஷயத்திலேயும் மிகையாப் பேசுறே. எனக்கு மனம் சபலப்பட்டா என்ன செய்யிறது?"
அவள் "சாரி" என்றாள். அவன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

இது கதை பிளஸ் மஸ் அலா. ஒவ்வொரு குடும்பத்திலும், குறிப்பாக மனைவியை மட்டும் விரும்பும் கணவர்களுக்கு ஏற்ப்படும் இம்சை இது. சபல புத்தி உள்ள கணவர்களிடம் மனைவிகள் இப்படிப் பேசுவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) இப்படிப் பேசி கணவனின் சபலத்தை தூண்டும் பெண்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார்கள். இதை ஆசிரியர் நடைமுறை கூறி விளக்கும் பாணி ரத்தினச் சுருக்கம்.
ஒரு புத்தகம் வாங்குங்கள். ஓராயிரம் புத்தகம் வாங்க சிபாரிசுப்பீர்கள். இன்ஷா அல்லாஹ்.
ஆசிரியர் : ஹாபிழ் எம் ஏ சாகுல் ஹமீத் ஜலாலி,
பேராசிரியர் ரியாழுள் ஜினான் அரபிக் காலேஜ்
பேட்டை. திருநெல்வேலி 627004
அலைபேசி: 97884 93468
பக்கம்: 192 +4
கதைகள்: 187
வெளியீடு: நிவேதிதா புத்தகப் பூங்கா,
14 /260 இரண்டாவது தளம், பீட்டர்ஸ் சாலை ராயப்பேட்டை. சென்னை 600014 .
அலைபேசி: 98847 14603 .
விலை: 90 ரூபாய்.மட்டும்.

Monday, February 7, 2011

மீண்டும் மீண்டும் மீலாத்!!!!!!!?

ஆஹா! இன்னொரு மீலாத்!
வருடா வருடம் மீலாத் கொண்டாடி என்னய்யா கண்டீங்க? இப்படி சில பேர்.
பேசுனதத்தானய்யா பேசுறாய்ங்க? இப்படி சில பேர்.
இதெல்லாம் அவசியமா? இன்னும் சில அறிவாளிகள்.
கேக்க நல்லாத்தான் இருக்கு. என்ன செய்ய? வருசா வருஷம் மீலாது நடத்தியுமே, வருசா வருஷம் இஸ்லாமை நினைவு படுத்தியுமே, கொஞ்ச கொஞ்சமா இஸ்லாமை அழிச்சிக்கிட்டு வர்றீங்களே? நீங்களாய்யா மீலாதைப் பத்தி குறை பேசுறீங்க?
மீலாதையே கெடுத்தவங்க சில பேர். குறிப்பா இஸ்லாமிய அரசியல் வா(வியா)திகள். அம்மாவுக்காக, அய்யாவுக்காக இஸ்லாமையே குர்பானி கொடுத்த தியாகிங்க! வெட்கக்கேடு!
நம்ம ஆளுங்களுக்கு திடீருன்னு புத்தி வரும். ஆலிம்சாக்கள் அலுத்துப் போய் தங்கள் அரசியல் சார்ந்த அரை வேக்காடு முஸ்லிமைக் கூப்பிட்டால் தலைமைக்கும் உச்சி குளிரும். நம்ம யாவாரமும் நடக்கும். இப்படி எண்ணத்தில் அழைப்பதுண்டு. ஆலிம்சாக்கள் அழைக்கப் பட்டால், "எங்க ஊரிலே ராத்திரி எட்டு மணிக்குதான் மக்கள் வருவாங்க. ஒரு ஏழு மணிக்கு ஆரம்பிச்சு, பத்து மணிக்கு முடிப்போம். ஒரு ஒன்பது மணி வாக்கில நீங்க வந்தா போதும்" என்று பேரம் பேசும் விழாக்குழு,
அரசியல்வாதி கிட்டே, "நீங்க டயம் கொடுங்கண்ணே!" என்று பவ்வியமாகப் பேசி, அந்தப் பெரிய மனிதர், "நைட்ல எனக்கு வேற மீட்டிங் இருக்குது. நீங்க சாயந்திரம் அஞ்சுமணிக்கு தொடங்கிடுங்க நான் ஆறு மணிக்கு வந்து, ஒரு ஏழு மணிக்குப் பேசிட்டு எட்டு மணிக்கெல்லாம் கெளம்பி விடுகிறேன்" என்று நேரம் கொடுக்க, அவரை எதிர்பார்த்து அசர் வக்த் குளோஸ்.
அவர் வந்த பின், கூட்டம் ஆரம்பித்து அல்லாவுக்கு பயந்து மக்ரிப் இஷா இடைவேளை விட்டாலும், வந்திருக்கும் முஸ்லிம் பெயர் தாங்கி பிரபலத்துக்கு, அதெல்லாம் அவர் இமேஜுக்கு ஒத்து வராத விஷயம் என்பதால், அவர் தொழுகையும், அவர் புண்ணியத்தால் ஒரு நூறு பேர் தொழுகையும் மண்ணாகி,.................,
தொழுகையை வலியுறுத்தும் விழாவிலேயே தொழுகை மண்ணோடு மண்ணாகிஇப்படி ஒரு ஸ்டைல் மீலாத்.
இன்னொரு ஸ்டைல், இங்கு பேச்சாளர் ஆலிமாகத்தான் இருக்கும். ஆனால் வசூலில் இருந்து, வழி நடத்துவது வரை இளைஞர்கள் என்பதால் அரசியல் வாதியின் மீலாதில் கண்ட காட்சியில் ஒரு மாற்றம். அங்கு தொண்டர்களும், தலைவரும் சேர்ந்து மட்டம் போட்ட தொழுகையை இங்கு மீலாத் வேலை பிசியில் இளைஞர்கள் மட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். சில குறிப்பிட்ட ஊர்களில் மீலாதுக்கு சம்பந்தமில்லாத கச்சேரி நடத்துவதும் இந்த துடிப்பான(?) இளைஞர் கூட்டம்தான்.
          இதிலே வேடிக்கை என்னன்னா, இந்த இளைஞர்கள் நடத்துற கூட்டங்களில், அல்லது அரசியல்வாதி நடத்தும் மீலாத் அலங்கோலங்களில் அதை கண்டித்துப் பேசும் ஆலிம்களையே அவமரியாதை செய்யும் இளைஞர்கள்,
கடனை உடனை வாங்கி அரபு நாடு போய், ஒரு அஞ்சு வருஷம் கழிச்சி திரும்பி வந்தா, எவனோ தப்பு தப்பா பேசுனத கேட்டு அறிவு வந்து, "மீலாதெல்லாம் நடத்தக் கூடாது. அது நபி வழி இல்லை. அது இது என்று தத்துவம் பேச, நமக்கே சந்தேகம் வரும்.
"நம்ம மென்டலா? இவன் மென்டலா? மீலாத் விழாவை கெடுத்ததே இவன்தான். இவனெல்லாம் மார்க்கம் பேசுனா......?"
அல்லாஹ்தான் இந்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அல்லது இவர்களிடமிருந்து இஸ்லாமை காப்பாற்ற வேண்டும்.
உங்களுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். ஒரு குரு போதனை செய்து கொண்டிருந்தார். மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இடை இடையே ஒரு பூனை குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தது. குரு அமைதியாக இருந்தாலும், மக்கள் அதன் பக்கம் கவனம் செலுத்த, அந்த குருவின் சிஷ்யன் ஒருவன் அந்தப் பூனையை ஒரு தூணில் பிடித்துக் கட்டினான். மக்கள் குருவின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதன் பிறகு ஒவ்வொரு நாளும் அந்தப் பூனையை தூணில் கட்டுவது வழக்கமாயிற்று.
இது மாதிரித்தான் மீலாத் விழாக்களும்.
நபிகள் நாதரின் காலமும், சஹாபாக்களின் காலமும், இமாம்களின் காலமும், முஹத்திசீன்களின் காலமும் இஸ்லாம் தேவையான அளவு அன்றாட வாழ்வில் கலந்த ஒன்றாகவே இருந்தது. பிந்தைய காலம், உலகத்துக்காக இஸ்லாம் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு, ஆளாளுக்கு இஸ்லாமை சின்னாபின்னப் படுத்த முனைந்த போது, “எனக்கு இது போதும், அது போதும், வேறெதையும் நான் கேட்க மாட்டேன். பார்க்க மாட்டேன்என இஸ்லாம் கூறு போடப்பட்ட வேளை, இஸ்லாமை நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு நினைவு படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதன் விளைவாக பல முயற்சிகள் ஏற்பட்டது. அதில் ஒன்றுதான் மீலாத்.
 நபிகள் நாயகம் (ஸல்) பிறந்ததும், மறைந்ததும் ஒரே நாள் என்பதாலும், .உங்களின் சலாம் ஒவ்வொரு முறையும் எனக்கு இறைவனால் எடுத்துச் சொல்லப் படுகிறது என்னும் நபிகளாரின் வாக்கை அடிப்படையாய்க் கொண்டும், அவர்களின் பிறப்பு பின்னாளில் உமர் கத்தாப் (ரழி) காலத்தில் இஸ்லாமிய வருடக் கணக்கு நிர்ணயிக்கப் பட்ட காலத்திலும் நினைக்கப்பட்டதை வைத்தும் மீலாத் விழா ஏற்படுத்தப் பட்டது.
இது இஸ்லாமின் கவனம் முஸ்லிம்களிடம் சிதறாமல் இருக்கவும், (அங்குமிங்கும் அலைந்த பூனை சீடர்களால் கட்டிப் போடப்பட்டது போல்) இன்னும், ஆளாளுக்கு லட்சங்களை சேர்க்க, கோடிகளை சேர்க்க இஸ்லாமை பயன்படுத்தி குழப்ப வாதம் செய்யும் இக்காலத்திற்கு தேவை என்பதாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரசூலுல்லாஹ்வே எனது மீலாதை நினையுங்கள் என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் நான் ஏற்றுக் கொள்வேன்என்று யாராவது சொன்னால், அவர்கள் இஸ்லாமிய அரை வேக்காடு நடிகர் நாசருக்கு சமமானவர்கள்.
ஏனென்றால் அவர்தான் சொன்னார்,
"சினிமா 100  வருசத்தில் வந்தது. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்தது. நபிகள் நாயகம் எப்படி சினிமாவைப் பற்றி சொல்ல முடியும்?
லாஜிக்கான கேள்வி இல்லே?
ஆமாம். ஆனால்,
"அடுத்தவன் மனைவியை நடிப்பு என்ற பெயரால் பெண்டாளுவது, ஆபாசக் கிடங்காக ஒரு சமுதாயத்தை உருவாக்க முனைவது, சமுதாயக் கேவலங்களை தைரியமாகச் செய்ய வைத்து மேலும் மேலும் குற்றவாளிகளை உருவாக்குவது, படுக்கையறை நடவடிக்கைகளை வீதிக்குக் கொண்டு வருவது எக்செட்ரா.... எக்செட்ரா..... இவைகளை புத்திக்குறைவான ஒருவன் கூட ஹராம் என்று சொல்ல முடியுமே?
இஸ்லாம், மனிதன் தனக்குத்தானே எதை அருவெறுப்பாகக் கருதுவானோ, அதைத்தானே ஹராம் என்கிறது? சினிமா அதில் ஒன்று இல்லையா?” என்று எப்படி நடிகர் நாசரிடம் விளக்க முடியாதோ, அல்லது அதை விளங்கும் அறிவை எதையாவது செய்து துட்டு பார்ப்பது என்ற எண்ணம் மறைத்துள்ளதோ,
அது மாதிரி இஸ்லாமிய அறிவு குறைவானவர்களிடம், மீலாது சம்பந்தமாக மேற்கண்ட விளக்கங்களை கூற முடியாது. அல்லது அதை விளங்கும் அறிவு அவர்களுக்குக் கிடையாது.
அவ்வளவுதான்.