Wednesday, September 28, 2016

ஏட்டுப் படிப்பும் ஏற்றமான படிப்பும்

தமிழில் கல்விக்கும் கலவிக்கும் ஒரே வித்தியாசம். கல்வியில் புள்ளி உண்டு. கலவியில் புள்ளி இல்லை. கல்வி என்பது படித்தல். கலவி என்பது படுத்தல். கல்வி சமுதாயத்தை மேம்படுத்துவது. கலவி மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதற்காக படுப்பது. கல்வியைப் படிப்பது பள்ளிக்கூட அறை. கலவியில் இருப்பது பள்ளியறை. ஆனால் இரண்டுக்கும் நோக்கம் ஒன்றுதான். அது சமுதாய மேம்பாடு.
சமுதாய முன்னேற்ற நோக்கமின்றி காசுக்காக மட்டும் படிப்பது அறிவு வேசித்தனம். சமுதாய முன்னேற்றத்துக்கான மனித வளம் பெருக வேண்டும் என்ற நோக்கத்திலல்லாது மற்றவரின் தற்காலிக உடல் பசி போக்க கலவியில் ஈடுபடுவது வேசித்தனம் என்பது சொல்ல வேண்டியதில்லை.
கல்வி என்பது வீட்டின், நாட்டின், உலகின், (முஸ்லிமாக இருந்தால்) மறு உலகின் நன்மைக்கானது மட்டுமே. கலவி என்பது என் குடும்பம் வம்சத்தால், பரம்பரையால், என் மார்க்கத்தால் புதிய எழுச்சி காணும் பிள்ளைகளை உருவாக்குகிறது என்ற எண்ணத்துடன், தன் துணையுடன் மட்டுமே துயில்வது. நோக்கம் மாறும்போது கல்வியும் கலவியும் புனிதத்துவம் இழக்கிறது.
சமீப காலமாக மார்க்கக் கல்வியை விட்டு மக்களை திசை திருப்பி அவர்களை உலகறியச்செய்யப் போகிறோம் என்று கிளம்பியுள்ள முஸ்லிம் படிப்பாளிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து போடும் கோஷம், “இந்த ஆலிம்கள் சமுதாயத்தை அறிவால் பின்னுக்குத்தள்ளி விட்டனர். கல்வியை மார்க்கக்கல்வி, உலகக் கல்வி எனக் கூறு போட்டு விட்டனர். இதனால் முஸ்லிம்கள் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்பது தான் அது.
கொஞ்சம் யோசிப்போம். அல்லாஹ் முதல் வார்த்தையாக “இக்ரஃ” – படி என்று சொன்னானே! அப்போது யாரை நோக்கி அவ்வார்த்தை சொல்லப்பட்டது? இஸ்லாமே அறிமுகப் படுத்தப்படாத மக்களை நோக்கியல்லவா? அது எதை குறியீடாகக் காட்டுகிறது?
”கல்வி உன்னை புரிய வைக்க உனக்குத் துணை புரிய வேண்டும். அடிமை என்று எவனும் இல்லை. அபூ ஜஹ்லுக்கு உரிய வாழும் உரிமை பிலாலுக்கும் ஸுஹைலுக்கும் உண்டு. அபு லஹ்புக்குறிய ஆடை முழுமையாக உடுத்தும் உரிமை அவனின் அடிமைக்கும் உண்டு. இதை நீ உணர உன்னை நீ படி. அதுதான் உன் முதற்படி. அதன் பிறகுதான் எல்லாம்”
அடிமை தான் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தால்தான் போராட்ட குணம் வரும். தனக்குத் தெரியாததை தெரியாது என உணர்பவன் பாதி அறிவாளி என்கிறது உலகம். இந்தப் படிப்பை முதலில் படிக்கச் சொல்கிறது இஸ்லாம். இது பொதுமனிதனைப் பார்த்து சொல்லப்பட்டது. காரணம் அந்த வசனம் இறங்கிய நேரம் இஸ்லாமின் அடிப்படை கூட அறிமுகமாகவில்லை.
பின் ஆலிம்கள் ஏன் உலகக் கல்வி மார்க்கக் கல்வி என கூறு போட வேண்டும்? என்றால், முஸ்லிமுக்கு கல்வி என்பதே நீதி, நேர்மை, சட்டப்பணிவு, மனிதாபிமானம், வாய்மை …….. இப்படி மனிதத் தன்மையின் சாராம்சங்கள் அனைத்தும் பொதிந்ததுதான் கல்வி. ஆனால், பொதுக் கல்வியின் கோளாறுகள் என்ன?
இங்கே மருத்துவனும் மருந்து விற்பவனும் ஒரே ஜாதியாக இருக்கிறான். அது விற்பனையாளன் என்கிற ஜாதி. பயங்களைக் காட்டி பணத்தைப் பிடுங்குபவன் மருத்துவனா? தைரியம் சொல்லியே நோயைக் குறைப்பவன் மருத்துவனா? மருத்துவத்துறையில் உலக மயமாக்கம் என்ற பெயரில், சாதாரண மருந்துகள் கூட அசாதாரண விலையில் இறக்குமதி செய்யப்படும் கொடுமையும், அதுதான் எழுதிக்கொடுக்கப்பட வேண்டும் என்று அரசாலேயே நிர்பந்திக்கப்படும் கொடுமையும் நடக்கிறதே? இதை இஸ்லாமிய வழி மருத்துவமாக ஏற்க முடியுமா?
வழக்கறிஞன் நீதியின் சார்பாக நிற்பதை விட கட்சிக்காரனின் சார்பாக வழக்காடுவதும், கடைகளைப் போட்டுக்கொண்டு வாங்கித் தருகிற நஷ்ட ஈட்டில் இத்தனை சதவிகித கமிஷன் என்று பேரம் பேசியே வழக்கு நடத்தும் கட்டப் பஞ்சாயத்துக்காரனாகவும் இருப்பதும், நிரபராதியை குற்றவாளியாக்க வேண்டுமா? குற்றவாளியை நிரபராதியாக்க வேண்டுமா? அந்தக் கிரிமினல் (?) வக்கீல் அதில் கெட்டிக்காரர் எனும் அளவு வழக்கறிஞனே கிரிமினல் தனமாக யோசிப்பதும் இஸ்லாம் அனுமதிக்கும் படிப்பா? மூதறிஞர் ராஜாஜி குற்றவாளிக்கு சார்பாக வழக்காடும்போதெல்லாம் சொல்வாராம், “எனவே குற்றவாளியின் குற்றத்துக்கான ஆதாரங்களை காவலர்கள் சரியாக நிரூபிக்காததால் என் கட்சிக்காரனை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்பாராம். இஸ்லாமிய நெறியும் அதுதானே?
வழக்கு தெரியாமலேயே சாட்சிகளின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்பவன், நீதி என்னவென்று தெரிந்தும் நிரபராதிக்கு எதிராகத் தீர்ப்புச்சொல்பவன் இப்படி சில நீதிபதிகளின் நடவடிக்கைகளை நரகவாதியின் நடவடிக்கைகள் என்றார்களே அண்ணல் நாயகம் (ஸல்) அவர்கள். நெஞ்சைத் தொட்டுச்சொல்லுங்கள், இன்றைய நீதிபதிகள் யாராவது சுவனத்திற்குரியவர்கள் எனக்கூற முடியுமா?    
நான் சொன்னது இரண்டு துறைகள்தான். இஸ்லாமிய வட்டியில்லா வங்கி முறையை இந்தியாவே அங்கீகரிக்கும் முடிவுக்கு வரும்போது இன்னும் நம்முடைய பையன் PNI வட்டிக்கணக்கு போட்டு பரீட்சை எழுதுகிறானே? இது இஸ்லாமியக் கல்வியா?

சுருக்கமாக எழுதப்படிக்க மட்டுமான ஆரம்பக் கல்வி மட்டுமே இன்றையக் கல்வியில் இஸ்லாமிய கல்வியாக இருக்க முடியும். மாறாக, மறுமைக்கு ஆதாரமாக நம்மை ஒரு காமிரா கண்காணிக்கிறது என்ற உணர்வுடன் காலை எழுந்ததிலிருந்து ஒவ்வொரு செயலிலும் அல்லாஹ்வை நினைவு கூறுவது, வியாபாரத்தில் நேர்மை, தொழிலாளர்களிடத்தில் இரக்கம், பிள்ளைகளிடம் பாசம், ஒழுக்க மாண்மியங்களை அவர்களுக்கு குர் ஆனின் நபிமொழியின் அடிப்படையில் விதைப்பது, கடமைகளில் குடும்பமே கண்ணும் கருத்துமாக இருப்பது, சக மனிதர்களை நம் மனிதர்களாக எண்ணுவது, சுருக்கமாக மனிதாபிமானம் பேணுவது……….. இப்படி மார்க்க அறத்துடன் வாழச்செய்யும் மத்ரஸாக்கல்வியே கல்வி. மற்றவைகளை பிழைப்பதற்கான வழி, அதுவும் தப்பாக! என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.    

(இது மலேஷிய இருமேனி ஜமாத் மலர் வெளியீட்டுக்காக 2016 ஆகஸ்டில் எழுதியது)

0 comments:

Post a Comment