Thursday, September 29, 2016

ரீ சைக்கிள் பின் (recycle bin)

உலகத்தின் புலம்பல் உங்கள் காதுகளில் விழுகிறதா? தெருவாசிகள் தெருக்குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக நகராட்சியிடம் சண்டை போடுகிறார்கள். ஊர்க் குப்பைகள் மொத்தமாக எங்கே கொண்டு கொட்டுவது? நகராட்சிக்குப் பிரச்னை. ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்திலிருந்து தனக்கே தெரியாமல் தன் நிலத்தில் கொட்டப்படும் மருந்துக்கழிவுகளை, கோழிக்கழிவுகளை கொட்ட விடாமல் தடுப்பது எப்படி? அன்றாட மக்கள் பயன்பாட்டுச் சாதனங்கள் போக மின்னணுக்கழிவுகள் எனப்படும் கம்பியூட்டர் கழிவுகளை என்ன செய்வது? இங்கு மட்டுமல்ல, வானத்தில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு ஏவிய விண்கலங்கள் (சாட்டிலைட்டுகள்) செயலிழந்த பின் முத்ல் வானத்திலேயே குப்பைகளாய்க் கொட்டிக் கிடக்கிறதே? அதை என்ன செய்வது?
சின்னச்சின்னப் பிரச்னைகளை பெரிதாக்கிப் பேசும் அரசியல்வாதிகள் மெகா பிரச்னைகள் மக்களுக்குத் தெரிந்து விடாமல் சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், அந்த மெகாப் பிரச்னைகள் தங்கள் நாற்காலியையே ஆட்டம் காணச் செய்து விடும் என்ற பயம்தான்.
1984 டிசம்பர் 2 ஆம் தேதி காலையில் விழிப்போம் என்ற நம்பிக்கையுடன் தூங்கிய போபால் மக்களில் நிறையப்பேரை மீளா உறக்கத்தில் ஆழ்த்தியும், நிறையப்பேரை முடமாக்கியும் கோரத்தாண்டவம் ஆடிய விஷவாயுக்கழிவுகள் முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் அகற்றப்படவில்லை. ஜெர்மன் நிறுவனம் ஒன்று நாங்கள் சுத்தப்படுத்துகிறோம் என்று கிளம்பி வந்தது. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை நேரில் ஆய்வு செய்ததும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது. இன்றும் பிறக்கிற குழந்தைகளை ஊனமாக்கியே பிறக்க வைக்கும் கொடூரம் கொண்ட விஷவாயுக்கசிவைப்பற்றி டிசம்பர் 2 ஆம் தேதி கூட யாரும் பார்லிமெண்டில் மூச்சு விடக்காணோம்.
சில இணைய இதழ்கள், “பிரதமர் அவர்களே! துடைப்பத்தை தூக்கிக்கொண்டு தெருக்களில் நாடகமாடுவதை விட போபாலுக்குப் போய் அந்த விஷத்தை தூய்மைப்படுத்துங்கள்என்றும் சொல்லியாயிற்று.
அதுசரி, “நீ கொலைகாரன். எனவே உன்னை என் நாட்டுக்குள் விட மாட்டேன் என்று  அமெரிக்க சொல்ல, இல்லை எங்க ஆள் ரொம்பப் பெரிய ஆள். அவர் எத்தனை கொலை செய்தாலும் நீ வரவேற்கத்தான் வேண்டும் விசா தா தாஎன பார்ட்டி கெஞ்ச, அது முடியாமல் போன போது, ”இரு உன்னிடம் விசா வாங்குவதற்காகவே மிருக பலத்துடன் ஆட்சி அமைக்கிறேன்”  என்று சவால் விட்டு அமெரிக்க விசாவுக்காகவே ஆட்சியில் அமர்ந்தது போல், வரக்கூடாது என்று சொன்ன அமெரிக்க மண்ணிலேயே காலடி வைத்து விட்டோமில்லையா? என சவடால் விடும் அமெரிக்க அடிமைகள் இருக்கும் வரை எத்தனை விஷவாயுக்கசிவுகளை ஏற்படுத்தினாலும் அமெரிக்கா நிமிர்ந்துதான் நடப்பான்.
அதனால்தான் 30 வருஷத்தில் நான்கைந்து அமெரிக்க அதிபர்கள் இந்தியா வந்து போய் விட்டார்கள். அது மாதிரி இந்தியப் பிரதமர்கள் (அமெரிக்க விசாவுக்காக சபதம் போட்டு பிரதமர் ஆன மோடி உட்பட) அமெரிக்கா போய் வந்து விட்டார்கள். போபால் விஷக்குப்பை பற்றி மூச்சு விடக்கூட இல்லை.
அடுத்து நவீன உலகின் குப்பை அரக்கன் மின்னணு குப்பைகள். எல்லா நாடுகளிலும் மின்னணுக் குப்பைகள் மலையாய்க் குவிந்திருப்பினும், வளர்ந்த (வல்லரசு) நாடுகளின் குப்பைக் கிடங்காக இந்த மின்னணுக் குப்பைகள் வளரும் நாடுகளுகளில் கொட்டப்படுவதையும் அதனால் சுற்றுப்புறக்கேடு நிகழ்வதையும் பரிதாபத்துடன் மட்டுமே பார்க்க முடிகிறது.
ஆப்பிரிக்காவின் கானா போன்ற நாடுகளில் இந்த வல்லரசுக் குப்பைகளை தரம் பிரிக்கவும், அதனால் கிடைக்கும் இரும்பு தாமிரம் போன்றவற்றை தினம் பத்து டாலர் கிடைத்தாலும் பரவாயில்லை என விற்றுப் பிழைக்கும் மக்களாகவும் அந்த ஏழை மக்கள் மாறி விட்டதால் அவர்கள் வைரஸ் நோய்களால் ஆட்பட்டும், அவர்களின் நீர்வளம் மின்னணுக் கழிவுகள் பூமியில் தேங்குவதால் விஷமாகியும் போன விபரீதம் நடந்து வருவதை டாக்குமெண்டரிகள் (குறும்படங்கள்) நமக்கு உணர்த்துகின்றன.
குப்பைகளைப்பற்றி காசி ஆனந்தன் ஒரு கவிதை சொல்வார், “ஆஃபிஸுக்கு அது குப்பைத் தொட்டி. குப்பை பொறுக்குபவனுக்கு அதுதான் ஆஃபிஸ்”. இதை சரியாகக் கையாள்வது கம்பியூட்டர்கள் மட்டுமே. கம்பியூட்டர்களின் குப்பைத் தொட்டிக்கு மறு சுழற்சித் தொட்டி (recycle bin) என்றுதான் பெயர்.
இன்றைக்கு நமக்கு தேவைப்படாதது, நாளை தேவைப்பட லாம். அதனால் குப்பைத்தொட்டியில் போட்டதை அதன் தேவையே இல்லை எனும் வரை குப்பைத் தொட்டியிலேயே விட்டு வைக்க வேண்டும் என்பது கம்பியூட்டர விதி. பொதுவாகப் பார்த்தால், சாப்பாட்டில் நாம் சேர்க்கும் சுவைக் கலவைகள் சாப்பிடும்போது தூக்கி வீசப்படுகின்றன. எல்லாவற்றிலும் உடலுக்குத் தேவையான சத்து மற்றும் மருந்து இருப்பினும் கறிவேப்பிலை, மல்லிக்கீரை மற்றும் சில பொருள்கள் தூக்கி வீசப்படுகின்றன. சில வீடுகளில் மட்டுமே வீணாகும் பிளாஸ்டிக் குப்பைகள் நேர்த்தியாக சேமிக்கப்பட்டு பழைய பிளாஸ்டிக் வாங்குபவர்களிடம் போடப்படுகின்றன. பேறும்பாலும் இந்த நேர்த்தி எல்லாரிடமும் கையாளப்படுவதில்லை.
தேவைகளை தேவைப்படுகிற நேரத்தில் தேவையான அளவு உபயோகிப்பதும், அதை உபயோகித்த பின் அதன் மறு சுழற்சிக்கான பாடத்தை தெரிந்து கொள்வதும் மனித சமுதாயம் அறியாதவரை குப்பைகள் நீங்காப் பிரச்னையாகவே இருக்கும்.
ஆளுக்கு இரண்டு செல்போன், அறைக்கு ஒரு டெலிவிஷன், கணக்கிலடங்கா மின்விளக்குகள், ஆளுக்கு ஒரு பைக், போதாதென்று இரண்டு பேருக்கு ஒரு கார், வீட்டில் ஸிஸ்டம், போதாததற்கு ஆளுக்கு ஒரு லேப்டாப்........... இன்னும் நான் சொல்லாமல் விட்ட பயன்பாடுகள். இதெல்லாம் நுகர்வோர் நோய்க்கலாச்சாரம் என அறிவுலகம் அலறுகிறது. இதில் இன்னொரு கேடும் சேர்ந்துள்ளது. உலகமயமாக்கம், தாராளமயம் என்ற பெயரில் இந்த நுகர்வுக்கலாச்சாரம் கூட இன்னொரு விஷத்தை விதைத்துள்ளது. அதுதான் இந்தியாவின் தனிச் சிறப்பான ரீஃபில் உபயோகம் ஒழிந்து யூஸ் அண்ட் த்ரோ உபயோகம் மலிந்துள்ளதால் குப்பைகளின் ஆதிக்கம் சமுதாயப் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) வடிவைத்துத் தந்த சுற்றுச்சூழல் குர் ஆனின் மூலம், “உண்ணுங்கள். பருகுங்கள். அளவு கடந்து விடாதீர்கள் என்கிறது. நாயக வாக்கு, “ஆற்றின் கரையில் ஒழுச்செய்தாலும் மூன்று முறைக்கு மேல் ஒரு உறுப்பை கழுகுவதை வீண்விரயம் “ என்கிறது.

குப்பைகளைப் பற்றியே குப்பை(மலை)யளவு எழுதலாம். பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டும், மறுசுழற்சி மிகச்சரியான விழிப்புணர்வுடன் செயல்படுத்தப் பட்டால் மட்டுமே குப்பைகளுக்கு விடிவு காலம் உண்டு.

0 comments:

Post a Comment