Friday, November 5, 2010

ஒட்டகக் குர்பானி - என்ன அவசியம்?

தமிழ்நாட்டில் இஸ்லாமியப் பிரிவினைவாதிகள் தலையெடுத்த பின், அதுவும் அதிகப் பிரசங்க அரசியல் பேச ஆரம்பித்த பின், புதிய பித் அத் (அவர்கள் பாஷையில் நரகத்துக்கு போக வைக்கும் செயல்) ஒன்று ஆரம்பமானது.
அது............ ஒட்டக குர்பானி.
அல்லாஹ் ஒட்டகத்தையும் அறுக்கச் சொல்லியிருக்கிறான். எனவே செத்துப் போன ஒரு அமலுக்கு நாங்கள் தான் உயிர் கொடுக்கிறோம் என்று கிளம்பி, இயக்கங்களின் சார்பில் மொத்தமாக ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்களை தமிழ் நாட்டுக்கு இறக்குமதி செய்து, தங்கள் பக்தர்கள் மிகுதமாக இருக்கும் ஊர்களுக்கு ஒவ்வொன்றாக அனுப்பி, அவர்கள், தங்கள் ஊர்களில் அந்த ஒட்டகத்துக்கு இயக்கப் பெய்ன்ட் அடித்து தெருத் தெருவாக, கோவில் யானையை பிச்சை எடுக்க விட்டது போல் அலைய விட்டு, குர்பானி கொடுக்கும் முன்னாலேயே அதை அரை உயிராக்கி, எல்லாரும் முதல் நாள் குர்பானி கொடுப்பதால், நம்மை வேடிக்கை பார்க்க வர மாட்டார்கள் என்று, இரண்டாம் நாள் பலத்த கரகோசத்துக்கு மத்தியில் குர்பான் கொடுத்து, அந்தக் கறியை தெருத்தெருவாக அலைந்து எல்லாருக்கும் கட்டாயமாகச் சேர்க்க முயற்சித்து, வேண்டாம் என்று மறுத்தவர்களை அல்லாஹ்வுக்கு விரோதியாக்கி,....................
அப்பப்பா, கண் கொள்ளாக் காட்சி!
ஏனய்யா திடீரென்று ஒட்டகக் குர்பானி?
நல்லாத்தானய்யா போய்க்கிட்டிருந்திச்சி?
என்று கேட்டவர்களுக்கு கிடைத்த ரெடிமேட் பதில்: "நாங்க தமிழ்நாட்டிலே இயக்கம் ஆரம்பிச்ச பிறகுதான், அல்லாஹ் ஒட்டகக் குர்பானி கொடுக்கச் சொல்லியிருக்கிரதையும், இந்தியச் சட்டத்தில் அதற்கு இடம் இருப்பதையும், தமிழ் நாட்டில் அந்த பர்ளைப் பற்றி ஆலிம்சாக்கள் இது வரை மூடி மறைத்திருந்ததையும் தெரிஞ்சிக்கிட்டோம். எனவே அதுக்கும் உயிர் கொடுக்கத்தான் இந்த மாபெரும் புரட்சி" என்றார்கள்.
எனக்கு எழுந்த கேள்வி இதுதான்:
* இந்தியாவிலும் ஒட்டகக் குர்பானி அனுமதி இருக்கிறது. அது ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது எனும்போது சட்டத்தை உயிர்ப்பித்தல் எங்கே இருக்கிறது?
*சாப்பிடலாம் என்பது வேறு. சாப்பிட வேண்டும் என்பது வேறு. நியதிகளை எல்லாம் சட்டமாக்க முயல்வதை விடக் கொடூரமான பித் அத் வேறெதுவும் இல்லை.
*இஸ்மாஈலுக்கு (அலை) ப் பதிலாக ஆட்டை அன்பளித்த இறைவன் ஆடு மட்டுமே அறுக்க வேண்டும். பங்கிட வேண்டும். சாப்பிட வேண்டும் என்றல்லவா கட்டளை இட வேண்டும்? மாறாக, ஆடு, மாடு, ஒட்டகம் மூன்று இனத்தையும் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன?
மனிதர்களை வித்தியாசமான நாடுகளில், வித்தியாசமான தட்ப, வெப்ப நிலைகளில் வாழ வைத்த இறைவன், ஆங்காங்குள்ள சூழ்நிலைகளில் வாழும் அனுமதிக்கப் பட்ட உயிர்களை சாப்பிட அனுமதித்தான்.
ஒன்றை யோசிப்போம். திருநெல்வேலி முஸ்லிம்கள் விரும்பிச் சாப்பிடுகிற செம்மறி ஆடு, ராமநாதபுரம் முஸ்லிம்களால் சாப்பிடப் படுவதில்லை. இன்னும் ஆடு சாப்பிடும் பெரும்பான்மை தமிழ் முஸ்லிம்களால் அதிலேயே பெண் ஆடுகள் சாப்பிடப் படுவதில்லை. மாடு தமிழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையோரால் சாப்பிடப் படுவதில்லை.........
இவ்வளவு விஷயங்கள் இருக்கும்போது, வன்முறையாக ஒட்டகக் குர்பானி ஏன்?
ஒட்டகம் சாப்பிடாத மக்களுக்கு மத்தியில் ஒட்டகக் குர்பானி என்று ஒரு நாள் கூத்து நடத்துபவர்கள் யாரைச் சீண்டுகிறார்கள்? மார்க்க கடமையை தீவிரவாதம் பண்ணி நிலை நாட்ட வேண்டிய அவசியம் என்ன?
யாரையாவது சீண்டி அதில் அற்ப மகிழ்ச்சி அடைவது இதுவரை காவித் தீவிரவாதிகளின் சொத்தாக இருந்தது. அது இடம் மாறி இருக்கிறதா?
தூய்மைவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

0 comments:

Post a Comment