Thursday, November 4, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள் - 2

தோள் சுமக்கும் தோணியிலே
போகும் வரை தோழா!
திருந்திட உனைத் தடுக்கும்
தீமைஎன்ன தோழா!
புத்திமதி நோக்கமல்ல சிந்திக்கணும் தோழா!
பக்தி நெறி நீ நடந்தால் சஞ்சலங்கள் சூழா!
பக்தி நெறி நீ நடந்தால் சஞ்சலங்கள் சூழா
(தோள்)

மதுவை மாதை விரும்பாதே -பின்
மனதில் வாடி வருந்தாதே!
மறுமை உண்டு மறவாதே -அங்கு
மாதா உன் மனையாளும் உதவாதே!
அங்கு மாதா உன் மனையாளும் உதவாதே!
(தோள்)

பொய் புறம் பேசி நடமாடி -நீ
புண் மனத்தோருடன் உறவாடி
போக்கிய நேரம் பல கோடி -இன்று
பிணியோடு கரைந்தோடும் உயிர்நாடி.
இன்று பிணியோடு கரைந்தோடும் உயிர்நாடி!
(தோள்)

மதிக்கும் உந்தன் உறவோர்கள் -உன்னை
மண்ணில் மூடி வருவார்கள்
ஏதோ என்றோ நினைப்பார்கள் -துயர்
இருந்தாலும் சில நாளில் மறப்பார்கள்.
துயர் இருந்தாலும் சில நாளில் மறப்பார்கள்!
(தோள்)

தொழுதாயா? என்று கேட்கப்படும் -உந்தன்
தீமையின் ஏட்டைக் காட்டப்படும்.
நெருப்பின் சாட்டை நீட்டப்படும் -உன்னை
நெடுங்காலம் நரகத்திலே வாட்டப்படும்.
உன்னை நெடுங்காலம் நரகத்திலே வாட்டப்படும்!
(தோள்)

இறையின் கோபம் அறிவாயா? -அதை
அறிந்தால் தீமையில் விழுவாயா?
என் மொழி கேட்டுத் தெளிவாயா? -இதை
உணராமல் சக்ராத்தில் அழுவாயா?
இதை உணராமல் சக்ராத்தில் அழுவாயா?
(தோள்)

(சத்தியத்தின் சோதனைக்கு எத்தனையோ போட்டி - இசையில்)

0 comments:

Post a Comment