Tuesday, November 5, 2013

ஹிஜ்ரத்தும் ம அல் ஹிஜ்ராவும்


அல்லாஹ்வின் பேருதவியால் ம அல் ஹிஜ்ராவுடன் 1434 வருடங்களை கடந்து 1435 தொட்டிருக்கிறது. இடம் பெயர்தல் என்ற அர்த்தத்திலான இவ்வருடக் கணக்கு, முதல் இடம் பெயர்தலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா விலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்ததிலிருந்து ஆரம்பமாகிறது.
சோதனையில் உச்சத்தில் ஆரம்பமான அப்பயணம் 1434 ஆண்டுகளைக்கடந்தும் பல சோதனைகளினூடே தன் பயணத்தை தொடர்கிறது.
உயிர் வாழ இடம் பெயர்தல், உழைத்துப் பிழைக்க இடம் பெயர்தல், உயர்வைத் தேடி இடம் பெயர்தல் என எத்தனையோ இடம் பெயர்தல் சரித்திரத்தில் உண்டு. ஆனால் என் கொள்கை பிழைக்க வேண்டும். அதை பிழைக்க வைக்க நான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே முதல் இடம் பெயர்தல் (ஹிஜ்ரத்) நிகழ்ந்தது.
இஸ்லாமியத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் இந்த ஹிஜ்ரத் தன் தடங்களை பதித்ததுண்டு. ஆரம்பத்தில் தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்த முஸ்லிம்களை எங்கோ இருந்த பாரஸிக, ரோம வல்லரசுகள், “இவர்கள் இருக்கும் வரை நம் வல்லரசு நாட்டாண்மை நிலைக்காதுஎன பயந்து அடர்ந்தேறிய போது, அவர்களை எதிர்கொள்ளவும் முஸ்லிம்களின் நாடு கடந்த ஹிஜ்ரத் தொடர்ந்ததுண்டு.
சொந்த வாழ்வில் பிரச்னைகளால் சூழப்பட்ட எத்தனையோ சஹாபாக்கள் அமைதியைத் தேடிக்கூட இடம் பெயர்ந்த வரலாறு கள் உண்டு. இடம் பெயர்தல் ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியா வசியமானது. தேவையற்ற நேரங்களில் இடம் பெயர்பவனும், அவசியமான நேரத்தில் இடம் பெயராமல் சொந்த பூமி, சொந்த வீடு தத்துவம் பேசித் திரிபவனும் உருப்படியாக வாழ முடியாது.
கலாச்சாரங்கள், நாகரிகங்கள் என்ற பெருமைகள் கூட இடம் பெயர்ந்த மனிதர்களால் அறியப்பட்டு, உணரப்பட்டு பரவலானது தான். மலேஷிய கலாச்சாரம் என்பது மூன்று இனங்களின் கலவையாகவே (மலாய் இந்திய சீன) அறியப்படுவதற்கு, எங்கேயோ இருந்து இடம் பெயர்ந்து வந்து மலேஷியாவை வளப்படுத்திய மறுக்க முடியாத மக்களான  இந்திய, சீன மக்களும் காரணம். 
கொள்கைகளை உயிர் வாழவைக்க ஆரம்பித்த இஸ்லாத்தின் ஹிஜ்ரத் இன்று சொந்த நாட்டிலேயே அகதியாய் ஒரு இடத்தி லிருந்து மற்றொரு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்து உயிர் வாழும் போராட்டமாய் முஸ்லிம்களின் வாழ்வு ஊசலாடிக் கொண்டி ருக்கும் நிலையில் புதிய ஹிஜ்ரத் 1435 ஒரு விடியலாக அமையட்டும்.
காலப்போக்கில் மறைந்து கொண்டிருக்கும் மலேஷியாவின் தமிழ் முஸ்லிம் மக்களின் கலாச்சார ஒழுக்க மாண்மியங்கள் புதுப்பொலிவு பெறட்டும். கலப்படமற்ற இஸ்லாமிய நடவடிக்கைகள் நம் வாழ்வில் ஒளியேற்றட்டும்.
ம அல் ஹிஜ்ரா வாழ்த்துக்கள்!!! 

0 comments:

Post a Comment