Tuesday, November 5, 2013

ஹிஜ்ரத் ஒரு வெற்றிப்படிக்கட்டு


அல்லாஹ்வின் பேருதவியால் ஹிஜ்ரா ஆண்டு  1434 வருடங்களை கடந்து 1435 ஐ தொட்டிருக்கிறது. இடம் பெயர்தல் என்ற அர்த்தத்திலான இவ்வருடக் கணக்கு, சோதனையில் உச்சத்தில் ஆரம்பமானது.
தொடர்ந்த ஒவ்வொரு ஹிஜ்ரத்தும் இஸ்லாத்தின் உயர்வை அடித்தளமாகக் கொண்டே காலடி வைத்தது.  தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்த முஸ்லிம்களை எங்கோ இருந்த பாரஸிக, ரோம வல்லரசுகள், “இவர்கள் இருக்கும் வரை நம் வல்லரசு நாட்டாண்மை நிலைக்காதுஎன பயந்து அடர்ந்தேறிய போது, அவர்களின் ஆளுமையில் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்த மக்களுக்கான அமைதிப்படையாக ஹிஜ்ரத் சென்றது.
ஸ்பெயினுக்கு மூஸப்னு நுழைர் என்ற மாவீரரின் தளபதியாக தாரிக் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி, அவரின் பின்னே மூஸப்னு நுழைரும் தன் தளங்களை விரிவு படுத்திக்கொண்டே போனது கூட அம்மக்களின் விருப்பத்திற் கிணங்க விடுதலை தந்த அமைதிப்படையாகத்தான்.
இந்தியாவின் முதல் அரபுத் தளகர்த்தர் முஹம்மது பின் காஸிம், சிந்துவை ஆண்ட தாஹிர் என்ற சர்வாதிகாரிக்கெதிரான அமைதிப்படையாகவே ஹிஜ்ரத் செய்து வந்து வெற்றி கண்டார்.
முகலாய மன்னர் பாபர் ஆக்கிரமிக்க வந்தவரல்ல. இங்கிருந்த இப்ராஹிம் லோடி என்ற சர்வாதிகாரிக்கெதிராக இங்கிருந்த சிற்றரசர்களான ஹிந்து மன்னர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று அமைதி உருவாக்க வேண்டியதாலேயே.
முஸ்லிம்களின் ஒவ்வொரு ஹிஜ்ரத்தும் இஸ்லாமியத்தின் வெற்றிப்படிக்கட்டுகளாகவே இருந்தது.  முஸ்லிம்கள் அரபுலகம் விட்டு ஹிஜ்ரத்தின் பெயரால் நகர நகர அறிவொளி, ஆன்மிக ஒளி என முஸ்லிம்களின் சகல பரிமாணங்களையும் எல்லா நாடுகளும் உள்வாங்கிக்கொள்ளும்   அற்புதம் நிகழ்ந்தது.
வரலாற்றுக்கலை அஸ்மாவுர்ரிஜால் எனும் மனித மாண்புக்கோர்வையை முஸ்லிம்கள் உண்டாக்கி அதை ஹதீஸ்களை தரம் பிரிக்கும் ரசவாதக் கலையாக கையாண்ட போது உலகம் வியந்தது.
இயற்கை மருத்துவத்திலிருந்து இன்றைய மருத்துவம் வரை இஸ்லாமில் இல்லாத மருத்துவம் இல்லை என இப்னு சீனா கிளம்பி கானூனுத் திப்பு எனும் அகராதியை ஐரோப்பாவுக்கே பாடமாகத் தந்த போது முஸ்லிம்களின் மருத்துவ ஹிஜ்ரத் மாண்படைந்தது.
இஸ்லாம் விரிவடைய விரிவடைய முஸ்லிம்களின் ஹிஜ்ரத் கட்டிடக்கலையிலிருந்து, கல்விக்கலையின் சகல நுணுக்கங்களால் உலகளாவியது. முகலாயர்களின் வருகை கூட இந்தியாவின் சுவையையே மாற்றியமைத்தது என்பதை பிரியாணி சாப்பிடும் எவரும் மறக்க முடியாது.
அரசாள மட்டுமல்ல, ஆரோக்கிய உணவிற்கும் கூட இஸ்லாமிய ஹிஜ்ரத் வழிகாட்டியாகவே அமைந்தது. மொத்தத் தில் ஹிஜ்ரத்தை ஆராய்ந்தால் அது ஒட்டு மொத்த வாழ்வின் வெற்றிப்படிக்கட்டுதானே!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment