Monday, November 22, 2010

மோதினார்கள்

“முஅத்தின்கள்” - அழைப்பாளர்கள் என்ற வார்த்தை மருவி மோதினார் என்றானது சரியோ, தவறோ, மோதினார்கள் வேலைக்கென்று அல்லாஹ் சில தியாகிகளை தேர்ந்தெடுத்தான். இப்போதுள்ளவர்களை நான் சொல்லவில்லை.

முந்தைய தலைமுறை மோதினார்கள், வேலைக்கு வந்ததில் இருந்து சமுதாயத்தில் மோதிக்கொண்டே இருந்ததால், அல்லது சமுதாயம் அவர்களோடு மோதிக்கொண்டே இருந்ததால் மோதினார் என்ற பெயருக்குப் பொருத்தமானார்கள்.
அன்று மோட்டார் இல்லை. பள்ளிவாசல் பியூன் இல்லை. பள்ளிவாசளுக்கென்று துப்புரவுத் தொழிலாளி இல்லை. ஆனால் எல்லாமாக இருந்தவர்கள் அன்றைய மோதினார்கள். அவர்கள் காலத்தில் ஹவ்லில் யாராவது அதிகத் தண்ணீர் செலவழித்தால் விரட்டி விரட்டி அடிப்பார்கள். காரணம் கிணற்றில் இறைத்து ஒவ்வொரு சொட்டாக ஹவ்லுக்கும், பாத் ரூமுக்கும் கொண்டு சேர்த்த சிரமம் அவர்களுக்குத்தான் தெரியும்.

நான்கு மணி அதிகாலை எழும் அவர்கள், பள்ளிவாசலை இரவில் பூட்டி படுக்கப் போகும்போது பத்து மணிக்கு மேல் ஆவது சர்வ சாதாரணம். சமுதாயத்தின் முதல் குடிமகனாக அவர்களை அறிமுகப் படுத்திய இஸ்லாமில், அவர்கள் மதிக்கப் பட்டதோ, கடைக் கோடி மனிதனாக. ஆம். இஸ்லாமில் குலத்தாழ்ச்சி இல்லை. ஆனால் மோதினார்கள் மதிக்கப் பட்டதோ தாழ்வான பிறவியாக மட்டுமே.
இமாம்களை விட சொர்க்கத்திற்கு முந்திச் செல்பவர்கள் முஅத்தின்கள் என்று சொல்லித் தரப்பட்ட சமுதாயத்தில், முஅத்தின் சத்தம் எட்டும் தொலைவு பாவங்கள் நீக்கப் படுகிறது என்று சொல்லித் தரப்பட்ட சமுதாயத்தில் நாம் முஅத்தின்களுக்குத் தரும் மரியாதை என்ன? சிந்திப்போம்.
என்னை பாதித்த இரண்டு மோதினார்களின் நினைவுக்காக எழுதப்பட்ட எழுத்து இது. ஒருவர் இருமேனியின் நீண்ட கால மோதினார் முஹம்மத் இப்ராஹீம் அப்பா. இன்னொருவர், வேதாளை முஅத்தினாக இருந்து நான் இதை எழுதும் வேளை மரணமாகி விட்ட முஹைதீன் அப்துல் காதர் அப்பா. இருவரும் ஐம்பது ஆண்டுக்கு மேல் இரண்டு ஊரிலும் அடிப்படை வசதி அற்ற காலத்தில் பனி செய்தவர்கள்.
உங்கள் ஊரிலும் பழைய மோதினார்கள் இருந்து, வாழ்க்கைக்குப் போராடிக் கொண்டிருந்தால் தயவு செய்து மேற்கண்ட இரண்டு ஊர் மக்களையும் போல் அவர்களை தத்தெடுங்கள். கவனியுங்கள்.
அல்லாஹ் சேவை மனப்பான்மையுடன் உள்ள மு அத்தீன்களின் ஈருலக வாழ்வை செழிக்கச் செய்வானாக!
மர்ஹூம்களாகி விட்ட என் அன்பிற்குரிய இருமேனி மற்றும் வேதாளை மோதினார்களின் மறுமை வாழ்வை சொர்க்கத்தைக் கொடுத்து வளமாக்குவானாக!

ஆமீன்.

0 comments:

Post a Comment