Tuesday, November 30, 2010

இஸ்லாமியத் திருமணம் ஒரு பார்வை (பகுதி 4)

கே 28 : மஹர் தொகைக்கு உச்ச வரம்பு உண்டா?

நிச்சயமாக அது மாப்பிள்ளையின் ஒரு மாத ஊதியத்திற்கு (இக்காலப்படி) மேம்படாததாக இருக்கும்.

கே 28 : அதை யார் நிர்ணயிப்பது?

பெண்ணின் பொறுப்பாளர் தான் நிர்ணயிக்க வேண்டும்.

கே 29 : பெண்ணே, 'எனக்கு இவ்வளவு தா!' என்று டிமாண்ட் பண்ண வேண்டும். என்றும், கிடைக்க வழியில்லை எனும் போது அந்த மாப்பிள்ளையை நிராகரிக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கிறார்களே!?

வரதட்சணை வாங்குகிற ஆண்கள் மீது ஏற்பட்ட வெறுப்பில் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதாவது நீங்கள் டிமாண்ட் செய்யுங்கள். இந்த ஆண் வர்க்கம் பெண் கிடைக்காமல் காய்ந்து போய் வழிக்கு வரட்டும் என்ற அர்த்தத்தில் பேசி இருக்கலாம்.

ஆனால் இந்த ஆணாதிக்க உலகில் 'பகிரங்கமான எய்ட்ஸை சுமந்து வந்து, அதை மனைவிக்கும் பரப்பி விட்டு, அவள் செத்துப்போன உடனேயே, அவன் எய்ட்ஸ் நோயாளி என பகிரங்கமாகத தெரிந்தும், அவனுக்கு பெண் கொடுக்க நான் நீ எனப் போட்டிப் போட்ட ஒரு கிராமத்தை' ஜூனியர் விகடன் பத்திரிகை சுட்டிக் காட்டிய பிறகும், 'பெண்களே! நீங்கள் உங்களுக்கான மகரை கேளுங்கள். அதுவும் லட்சக்கணக்கில் கேளுங்கள். என்று உசுப்பி விடுவது முதிர் கன்னிகளை உருவாக்க மட்டுமே உதவும்.

(ஒரு கொசுறு செய்தி : சென்னையின் பிரதான பள்ளிவாசல் ஒன்றில் இமாமாக பணிபுரியும் பிரதான ஆலிம். ஒரு சஹர் நேர சிந்தனையின் பொது, "பெண் கேட்டு வரும் மாப்பிள்ளையிடம் எனக்கு ரெண்டு லட்சம் தர்றியா? என்று பெண்ணே கேட்க வேண்டும். மாப்பிள்ளை சொல்வான், 'இல்லங்க! நம்மால ஒரு லட்சந்தான் கொடுக்க முடியும்' என்றால், 'ஒரு லட்சமா? அப்படின்னா அடுத்த வீட்டுல ஒரு கருப்பி இருக்கா, அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ' என்று சொல்ல வேண்டும்" என்றார்.

இவர், இஸ்லாம் வெறுத்த நிற இழிவைத் தூண்டுவதோடு, மஹர் என்பது திருமணக் கொடை என்பதை மாற்றி, அதை ஒரு பெண்ணுக்கான விலை என்றாக்கி, பெண்களை அசிங்கப் படுத்துகிறாரல்லவா? இது போல அறிவாளிகள் நட்டு நடு ராத்திரியில் நம்மை உட்கார வைத்து மெண்டல் ஆக்குவதால்தான் 'ஐயா புண்ணியவான்களே! சகர் சிந்தனையே வேண்டாம் ஐயா!' என்று "ஹை அதுஷ் ஷரீ ஆ" போன்ற அமைப்புகளும், ஜமா அதுல் உலமாப் பேரவையும் அலற ஆரம்பித்துள்ளன)

கே 31 : ஒரு பொற்குவியல் அளவுக்கு மகர் கொடுக்க வேண்டும் என்று குர் ஆன் சொன்னதாகவும், அந்தக் காலத்திலேயே மஹருக்கு உச்ச வரம்பு கொண்டு வர வேண்டும் என்று உமர் (ரழி) விரும்பியபோது, ஒரு கிழவி இந்த வசனத்தைக் காட்டி உமருக்கு உணர்வூட்டியதாகவும் சிலர் சொல்கிறார்களே?

இது உமர் (ரழி) குர் ஆனை விளங்காதவர் போலவும், ஒரு சாதாரணக் கிழவி உமருக்கே அறிவுறுத்தியதன் மூலம், இன்னும் பல விஷயங்களில் உமருடைய பேச்சைக் கேட்க வேண்டியதில்லை (தராவீஹ் 20 ரக் அத் போல) என்பதற்காகவும் சில நூதனர்கள் தொண்டை கிழியப் பேசும் விஷயம். இது.

குர் ஆனின் அந்த வசனம் முதலில் மஹர் சம்பந்தமான ஆயத்தே அல்ல. நிசா சூராவின் இருபதாம் வசனம் அது. சுய சிந்தனையோடு இருந்தால் படித்துப் பாருங்கள். (குர் ஆனே சுய சிந்தனை இருந்தால்தான் தன்னைப் படிக்க ஏவுகிறது.)

அந்த ஆயத்

"நீங்கள் மணமுடித்திருக்கும் மனைவி உங்களுக்கு ஒத்து வராத பட்சத்தில், நியாயமான காரணங்களுக்காக இன்னொரு பெண்ணை மணமுடிக்க நீங்கள் விரும்பினால், முதல் பெண்ணை தலாக் விடும் பட்சத்தில் திருமணம் முடித்த காலத்தில் இருந்து, அன்று வரை அப்பெண்ணுக்காக நீங்கள் செலவழித்தது, (மஹர் உட்பட) ஒரு போற்குவியலாக இருந்தாலும் அதில் எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளாதீர்கள். அவளுக்கு செலவழிப்பது உங்கள் கடமையாக இருக்க, தலாக்கை காரணம் காட்டி அநீதமாகவும் ஈனத்தனமாகவும் அபகரித்துக் கொள்கிறீர்களா?"

இதுதான் அவ்வசனம்.

இல்லையென்று யாரவது சொல்லட்டும் பார்க்கலாம்.

உங்களுக்கு நான் பாடம் நடத்துவது என்றால்,

ஒரு ஏழை மணமுடிக்கும்போது, மஹராக 1000 ரூபாய் கொடுக்கிறான். அவனின் ஐந்து வருட தாம்பத்தியத்தில் சாப்பாடு, வீட்டுச் செலவு, ஆடை வகைகள் போக சின்னஞ்சிறு நகைகள், பரிசுப் பொருள்கள் என 25 ,000 செலவழிப்பான்.

நடுத்தர மணமகன் மஹராக 5 ,000 மேலே சொன்ன கடமையான செலவுகள் போக, மேலே சொன்ன மற்றவைகளுக்காக 2 லட்சம் செலவழிப்பான்.

பணக்கார மணமகன் மஹராக 5 பவுன் சங்கிலி (சுமார் ஒரு லட்சம்) மேலே சொன்ன கடமைகள் போக, பரிசாக அவன் கொடுப்பதை ஒரு பொற் குவியலுக்கு சமமாகக் கொண்டால், ....................,

இப்போது அல்லாஹ் சொன்னதை படியுங்கள்.

சாதாரணன் கொடுக்கும் 25000 லிருந்து, பணக்காரன் தரும் பொற்குவியல் வரை எவ்வளவு செலவழிப்பினும் அதை திரும்ப வாங்கி உன்னை ஈனப்படுத்திக் கொள்ளாதே!

இதுதான் அல்லாஹ் சொல்வது.

மஹர், தகுதிக்குத் தக்க மாதிரிதான் என்பதை இன்னொரு வசனத்தில் நம்மைப் படைத்த இறைவன், நம்மைத் தெரிந்த இறைவன் சொல்வதை இந்த அரைகுறைகள் அறிந்தால், "லட்சம் கேளு! கோடி கேளு! என்று பெண்களை உசுப்பி விட்டு, முதிர்கன்னிகளை உருவாக்கி, அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள்.

அந்த வசனம்............

(இன்ஷா அல்லாஹ் 5 ஆம் பகுதியில்)

0 comments:

Post a Comment