Tuesday, October 1, 2013

ஹஜ் ஒரு இனிய குடும்பத்தின் நினைவு



வாழ்கிறோம் ஒரு மாதிரியாக! காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நெறியற்ற முறையில். அம்மா அழைக்கிறார், “மகனே! எனக்கொரு உதவி. செய்வாயா?” அப்பீலே இல்லாமல் மறுக்கிறோம், “உனக்கு வேறு வேலை இல்லை?” மனைவியைக் கேட்கிறோம், “ஏம்மா! மகனை எங்கே?” மனைவி மறுவினாடி சொல்கிறார், “அவன் எங்கே போகிறான். என்ன செய்கிறான். யாருக்குத் தெரியும்?”
மகனை ஏவுகிறோம், “மாலைக்குள் அரசுக்குக் கட்ட வேண்டிய வரிகளை கட்டிவிட்டு வந்து விடுமகன் உடன் மறுக்கிறான், “நீ போகிற வழியில் தானே இருக்கு. கட்டிட்டா என்ன?” அம்மா மகளைக் கேட்கிறாள், ”எம்மா! சோத்துப் பானையிலே வெந்துருச்சான்னு ஒரு பார்வை பாருமகள் நாவல் படிக்கும் சுவாரசியம் கெட்டுப்போன் அதிருப்தியில், “ஏம்மா! நான் சும்மா இருக்கிறது மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரியுமா?”.
என்ன ஒரு வாழ்க்கை! யாருக்கும் யாரும் கட்டுப்படாத, யாரும் யார் சொல்லையும் மதிக்காத குடும்பம், சமூகம், உறவுகள் என என்ன மாதிரியான வாழ்க்கை?
இந்த வாழ்வில் இருந்து கொண்டே ஹஜ்ஜுப்பயணம் மேற்கொள்ளும் நாம், கஃபாவைப்பார்க்கிறொம், “ஆஹா! இது தன்னை சரியாக வளர்த்த ஒரு தவறான வளர்ப்புத்தந்தைக்காக அல்லாஹ் தடுக்கும் வரை பாவ மன்னிப்புக்கேட்ட மகன் இப்ராஹீம் (அலை) நின்ற இடம் இல்லையா? தந்தைக்குப்பணிந்த மகனும், மகனை நல்லவனாகச் செதுக்கி வளர்த்த தந்தையும், கொத்தனாக, கையாளாக  நின்று கட்டிய ஆலயமல்லவா?” நினைவு வருகிறதா?
வானுயர்ந்த கட்டிடங்களையும் மீறி, வானம் பார்த்த கட்டாந்தரைகளும் கண்ணுக்குத் தென்படுகிறதா? ”இங்குதான் ஒரு அம்மா எங்கேயோ இருக்கும் தன் கணவனின் கனவுகளையும், வமிசப்பாரம்பரியத்தையும் உள்வாங்கி, அவர் தந்த குலக்கொழுந்தாம் மகனை அவர் குணத்துடனே பார்த்து பார்த்து வளர்த்த அன்னை ஹாஜராவும், மகன் இஸ்மாயீலும் கொதிக்கக் கொதிக்க வளர்ந்த பூமியல்லவா?”  நினைவுக்கு வருகிறதா?   
அரஃபாவில் நிற்கிறீர்கள். இது உன்னை அல்லாஹ்வுக்காக பலியிடப்போகிறேன்என ஒரு தந்தை சொன்னதும், “என்னையா? யாரைக்கேட்டீர்கள்? உங்களுக்கு இரக்கம் இல்லையா? நான் வாழ வேண்டும் என்ற எண்ணமில்லையா? என்ன வகையான தகப்பன் நீங்கள்?” என்று கேட்க அல்ல, முணுமுணுக்கக் கூட செய்யாமல், “அல்லாஹ் சொன்னால் செய்ய வேண்டியதுதானே தவிரஎன்னைக்கேட்க என்ன இருக்கிறது?” என்று போட்டி போட்டு இறையச்சத்தில் மிகைத்து நின்ற தந்தை இப்ராஹீமும், தனையன் இஸ்மாயீலும் பொறுமை காத்த பலிபீடமல்லவா இது?” நினைவு வருகிறதா?
ஜம்ராவைப் பார்க்கிறீர்கள். மகனை பலியிட தந்தை அழைத்துச் சென்ற போது, பாசத்தைக்காட்டி அம்மாவையும், பரிதவிப்பைக்காட்டி தகப்பனையும், பாரின் வனப்புகளை பார்க்காமல் பரிதாபமாக செத்துப் போகப் போகிறாயா? என்று மகனையும் சீண்டிப்பார்த்த ஷைத்தானை அம்மா, மகன், தந்தை என மூவரும் கல்லால் விரட்டி விரட்டி அடித்தது நினைவுக்கு வருகிறதா?
வரும். வர வேண்டும்.
போய் விட்டு வந்த பிறகாவது உங்கள் குடும்பம் அந்த அன்னை போன்ற, அந்தத் தந்தை போன்ற, அந்த மகன் போன்ற குடும்பமாக இறையச்சத்தில், ஒருவருக்கொருவர் விரும்பும் விதத்தில் மாற வேண்டும். இல்லையேல் ஒரு கெந்திங் போவது போல ஒரு மலாக்கா போவது போல உங்கள் ஹஜ்ஜும் ஒரு சுற்றுலாதான்.
சந்தேகமில்லை.
ஈதுல் அள்ஹா முபாரக்!

0 comments:

Post a Comment