Monday, November 1, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள்

சிவகாசி அஸ்மத் ........ ! எண்பதுகளில் தமிழ்நாட்டு ஆன்மிக வானில் கோடி கட்டிப் பறந்த பெயர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் அஸ்மத் ஹுசைன் மன்பஈ அவர்களை தெரியாதார் இருக்க முடியாது. தமிழ் முஸ்லிம்களின் மேடைகளின் அனைத்து வடிவங்களிலும் ஜொலித்தவர். 1985 க்குப் பின் கீழக்கரை கதீப் ஆகி தன் கடைசி நிமிடம் வரை மின்பருக்கு கம்பீரம் தந்தவர்.
சொல்ல மறந்து விட்டேனே!
ஒரே ஒரு வருடம் (1982) கயத்தாறில் எனக்கு ஹிப்ழ் உஸ்தாத். அந்த ஒரு வருடத்தில். என்னை எழுத்து, பேச்சு, கவிதை பாட்டு அனைத்திலும் உருவாக்கியவர். அன்னாரின் நினைவாக அவர்களின் பாடல்கள் சில.........!

(தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை... மெட்டில்)

என்னரும் பிழைகளை போக்கிடும் வல்லா
உன்னருள் வழங்கிட வேண்டுகிறேன்- நீ
இன்னருள் வழங்கிட வேண்டுகிறேன்.
உன்னருளே இந்த ஏழையை காக்கும்
உன்னிடமே இரு கைகளை ஏந்தும்.
(என்னரும்......)

பிழைகளை தினமும் திருத்திட நினைத்தேன்.
பின்னரும் இடறி தீமையில் விழுந்தேன்.
தொடருது துயரம் என்றுனை அழைத்தேன்.
தூய்மையில் சேர்க்கும் துணையென உணர்ந்தேன்.
தூய்மையில் சேர்க்கும் நல்ல துணையென உணர்ந்தேன்.
(என்னரும்.....)

இறைஞ்சிடும் இதயம் இன்புற வேண்டும்.
கரைந்திடும் உள்ளம் களிப்புற வேண்டும்.
நனைந்திடும் விழிகள் நிலைபெற வேண்டும்.
நல்லருள் நீயே தந்திடு இறைவா!
நல்லருள் நீயே இங்கு தந்திடு இறைவா!
(என்னரும்.....)

நினைவினில் வாழும் திருநபி பொருட்டு
நீங்கிட வேண்டும் தவறெனும் இருட்டு
ஏழை என் ஏட்டின் தீமையை திருத்து
என்னிரு பாதம் நேர்மையில் நிறுத்து.
என்னிரு பாதம் இங்கே நேர்மையில் நிறுத்து.
(என்னரும்.....)

உத்தமராம் அபூ பக்கருக்காக
உன்னத நீதி உமரினுக்காக,
உதுமான் அலீயின் உயர்வினுக்காக,
உன்னருள் வேண்டும் என்னுயிர் காக்க
உன்னருள் வேண்டும் இங்கே என்னுயிர் காக்க.
(என்னரும்....)

அருந்தவ நபியின் பேரர்களான
ஹசனின் ஹுசைனின் தியாகத்துக்காக,
வளம் நிறை கவ்துள் அ" லமுக்காக
வழங்கிடு அருளை நீ எனக்காக.
வழங்கிடு அருளை இங்கு நீ எனக்காக.
(என்னரும்.....)

என் மனம் துயரில் நீந்திடக் கூடும்
ஏந்திய கைகள் சோர்ந்திடக் கூடும்
முன்னவன் நீயே என்னவன் நீயே
முறையுடன் இறைஞ்சும் நெஞ்சம் தந்தாயே!
முறையுடன் இறைஞ்சும் நல்ல நெஞ்சம் தந்தாயே!
(என்னரும்....)

0 comments:

Post a Comment